''மகாராஷ்டிராவில் சிவசேனா - காங். - NCP அரசு 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும்'' : சரத்பவார்

தேசியவாத காங்கிரசான NCP-ன் கோரிக்கையை ஏற்று பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறியது. அக்கட்சியின் ஒரேயொரு மத்திய அமைச்சரான அரவிந்த் சாவந்த் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

''மகாராஷ்டிராவில் சிவசேனா - காங். - NCP அரசு 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும்'' : சரத்பவார்

மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டதிலிருந்து முதன்முறையாக கூட்டணி அரசு அமையும் என சரத்பவார் கூறியுள்ளார்.

Mumbai:

மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அரசு அமையும் என்றும், இந்த அரசு 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி NCP தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக கூறியுள்ளார். அரசியல் நிலைத்தன்மை ஏற்படாத நிலையில், 3 கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில் சரத் பவார் அளித்திருக்கும் பேட்டி மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

மும்பையில் சரத் பவார் அளித்திருக்கும் பேட்டியில், சிவசேனா - என்.சி.பி. - காங்கிரஸ் அரசு மகாராஷ்டிராவில் அமைக்கப்படும். இந்த அரசு ஆட்சிக்காலமான 5 ஆண்டுகளை முழுமையாக பூர்த்தி செய்யும் என்று தெரிவித்தார். 

முன்னதாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவீஸ் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் அரசு அமைந்தால், 6 மாதத்திற்கு மேல் தாக்குப்பிடிக்காது என்று கிண்டல் செய்திருந்தார். 

அவரை கலாய்த்த சரத் பவார், 'எனக்கு தேவேந்திர பட்னாவீசை கடந்த சில ஆண்டுகளாக தெரியும். ஆனால் அவர் ஜோசிய மாணவர் என்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது' என்று கூறினார். 

முதல்வர் பதவிக்கு தற்போது யாரும் கோரிக்கை வைக்கவில்லை என்றும், அது தொடர்பாக விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றும் சரத் பவார் குறிப்பிட்டார். 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தலைவரான நவாப் மாலிக் கூறுகையில், 'எங்களது கோரிக்கையை ஏற்று பாஜகவை விட்டு சிவசேனா பிரிந்தது. இப்போது சிவசேனாவின் மரியாதையை காப்பாற்றுவது என்பது எங்களது பொறுப்பு. சிவசேனாவை சேர்ந்தவர்தான் மகாராஷ்டிர முதல்வராக பொறுப்பில் இருப்பார்' என்று கூறினார். 

முன்னதாக சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், எதிர்வரும் 25 ஆண்டுகாலத்திற்கு மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சிதான் இருக்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

More News