This Article is From Nov 20, 2019

பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி - சரத்பவார் சந்திப்பு!!

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவு முக்கியமானதாக பார்க்கப்படும் சூழலில், பிரதமர் மோடி - சரத்பவார் இடையிலான சந்திப்பு நடைபெறுகிறது.

இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியும் - சரத்பவாரும் சந்திக்கின்றனர். (File)

New Delhi:

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவு முக்கியமானதாக பார்க்கப்படும் சூழலில், பிரதமர் மோடி - சரத்பவார் இடையிலான இந்த சந்திப்பு நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்றாலும், சரத்பவாரின் ஆதரவு முக்கியமானதாக உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில், அவருக்கு நாட்டின் உயரிய பதவியான குடியரசுத்தலைவர் பதவியை தருவதாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

மகாராஷ்டிர தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 தொகுதிகளில்  பாஜக, 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா, 56 இடங்களில் வெற்றியடைந்தது. பெரும்பான்மைக்கு 145 இடம் தேவையென்ற நிலையில், பாஜக - சிவசேனா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை வகித்தது. எனினும், 50:50 அதிகாரப்பகிர்வு, 2.5 வருடத்துக்கு சுழற்சி முறையில் சிவசேனாவுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளில் சிவசேனா பிடிவாதமாக இருந்து வந்தது. தேர்தலுக்கு முன்பாகவே அமித்ஷாவுடன் இந்த கூட்டணி ஒப்பந்தங்கள் நடந்து முடிந்ததாக சிவசேனா கூறியது. 

ஆனால், அது போன்ற எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என ஆரம்பம் முதலே பாஜக உறுதியாக கூறியது. இப்படி இரண்டு கட்சிகளுக்கும் இடையேவும் தொடர்ந்து, அதிகாரப்பகிர்வு மோதல் நீடித்ததால் கூட்டணி முடிவுக்கு வந்தது. மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சியும் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் சிவசேனா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

எனினும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சிவசேனாவுக்கு பிடிகொடுத்ததாக தெரியவில்லை. கூட்டணி ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நீடித்து கொண்டே இருக்கிறது. இதனிடையே, சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துபோதும், இரண்டு கட்சிகளும் முடிவெடுக்க ஏற்பட்ட தாமதத்தால், அந்த வாய்ப்பு ஏற்கனவே சிவசேனாவுக்கு பறிப்போனது. 

இப்படிப்பட்ட அரசியல் சூழலில், கடந்த திங்கள்கிழமையன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தேசியவாத காங்கிரஸ் கட்சியை புகழ்ந்து பேசினார். அதில், தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் பிஜூ ஜனதாதளம் கட்சிகள் நாடாளுமன்ற விதிமுறைகளை சரியாக கடைப்படிப்பதாகவும், அவர்கள் ஒரு போதும் அவையை நடக்கவிடாமல் அமளியில் ஈடுபட்டதில்லை. அவர்களின் கருத்துகளையும் மிக துல்லியமாக வெளிப்படுத்தி வருகின்றனர். எனது கட்சி உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும், அவர்களிடமிருந்து இதனை கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாராட்டினார். 

இந்நிலையில், சரத்பவார் - பிரதமர் மோடி சந்திப்பு குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது, "சரத் பவார் ஒரு மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய வேளாண்துறை அமைச்சர். ஆகவே, பிரதமரைச் சந்தித்து நாட்டில் விவசாயிகளின் துயரங்களைப் பற்றி அவருக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டேன்" அதன் அடிப்படையிலே இந்த சந்திப்பு நடைபெறுகிறது என்றார். 

சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான நிலைப்பாட்டில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சிவசேனா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் தொடக்கத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும், இதற்காக கடந்த 10-15 நாட்களாக நடந்து வந்த ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சுமுகமாக முடிந்ததாகவும் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். 

.