This Article is From Aug 24, 2020

காங்கிரஸ் தலைமை குறித்து அக்கட்சியின் 10 தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம்!

ஆனால் இப்படியான உள்ளடக்கம் இல்லாத கடிதங்களை காங்கிரஸ், “பாஜக கைக்கூலிகளின் செயல்” என விமர்சித்து வருகின்றது.

கட்சியின் மறுமலர்ச்சி குறித்து நாளை இணைய வழி கூட்டம் நடைபெறுகின்றது.

ஹைலைட்ஸ்

  • சோனியாக காந்தி இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • ராகுல் காந்தி அடுத்த தலைவராக பொறுப்பேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர்
  • நாளை கட்சியின் செயற்குழு (CWC) கூட்டம் இணைய வழியாக நடத்தப்படுகிறது
New Delhi:

காங்கிரஸ் கட்சியில் கடந்த சில நாட்களாக கட்சித் தலைமை குறித்து பல சலசலப்புக்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில் இது குறித்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள் கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி இயங்கும் நடைமுறை குறித்து மூத்த தலைவர்களுக்கும், இளம் தலைமுறையினர்களுக்கும் பெரும் அதிருப்தி இருந்து வந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்ற பிறகு அக்கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்தார்.

வேறு வழியின்றி சோனியாக காந்தி இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், ஓராண்டு கடந்த பின்னரும் 73 வயதான சோனியா இடைக்கால தலைவராக நீட்டித்துக்கொண்டிருதை அவரே விரும்பவில்லை என தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. பலர் ராகுல் காந்தி அடுத்த தலைவராக பொறுப்பேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து முக்கிய முடிவுகளை மேற்கொள்ளவும், கலந்தாலோசிக்கவும் நாளை கட்சியின் செயற்குழு (CWC) கூட்டம் இணைய வழியாக நடத்தப்படுகிறது. தற்போதைய சூழலில் கட்சியில் நிலவும் நிச்சயமற்றத் தன்மை, அரசியல் பின்னடைவு போன்றவை குறித்து கட்சியின் தலைவர்கள் கவலைப்படுவதாகவும், இதன் காரணமாக நேர்மையான சுய விமர்சனம், கூட்டுத்தலைமை, கட்சியிலிருந்து விலகும் இளைஞர்கள் போன்றவை குறித்து தலைவர்கள் இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி அரசியல், சமீபத்தில் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ராஜஸ்தான் அரசியலில் ஏற்பட்ட சலசலப்பை ஜா வெளிப்படையாக விமர்சித்ததற்காக அவர் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் ஜா, சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைமை குறித்து அக்கட்சி தலைவர்கள் 100 பேர் கட்சியின் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் இப்படியான உள்ளடக்கம் இல்லாத கடிதங்களை காங்கிரஸ், “பாஜக கைக்கூலிகளின் செயல்” என விமர்சித்து வருகின்றது.

.