This Article is From Nov 19, 2019

மகாராஷ்டிராவில் விரைவில் சிவசேனா தலைமையிலான ஆட்சி அமையும்; சஞ்சய் ராவத்

சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான நிலைப்பாட்டில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது.

மகாராஷ்டிராவில் விரைவில் சிவசேனா தலைமையிலான ஆட்சி அமையும்; சஞ்சய் ராவத்

விவசாயிகள் பிரச்சினை குறித்தே சரத்பவாருடன் விவாதித்தேன் - சஞ்சய் ராவத்

Mumbai:

மகாராஷ்டிராவில் விரைவில் சிவசேனா தலைமையிலான ஆட்சி அமையும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர், சரத் பவாரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் நேற்று டெல்லியில் ஆலோசனை செய்தனர்.

சுமார் 50 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சரத் பவார், மகாராஷ்டிராவின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தோம், ஆனால் ஆட்சி அமைப்பது தொடர்பாக விவாதிக்கவில்லை. 'எந்த கட்சியுடனும் கூட்டணி அமைப்பது குறித்து இன்னும் ஆலோசிக்கவில்லை. அதற்கு மேலும் சில விஷயங்களில் தெளிவும் ஆலோசனையும் தேவப்படுகிறது' என்றார். 

அதேபோல், மகாராஷ்டிராவில் 105 தொகுதிகளை கைப்பற்றியுள்ள பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைக்க கதவுகளைத் திறந்துவிட்டதாக கூறப்படும் ஊகங்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பாஜவை ஆதரிப்பது தொடர்பாக எந்த கேள்வியும் தேவையில்லை. நாங்கள் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார். மேலும், மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதன் மூலம் எங்களுக்கு நிறைய நேரம் கொடுத்துள்ளது என்று கூறினார். 

இதனிடையே, சோனியா காந்தி - சரத்பவார் சந்திப்புற்கு பின் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சரத்பவாரை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் ராவத், சரத்பவாருடன் நடந்த ஆலோசனை குறித்து எதுவும் விரிவாக கூறாமல், மகாராஷ்டிராவில் விரைவில் சிவசேனா தலைமையிலான ஆட்சி அமையும் என்று நம்பிக்கை மட்டும் தெரிவித்தார். 

மேலும், விவசாயிகள் பிரச்சினை குறித்தே சரத்பவாருடன் விவாதித்தேன். மேலும், "சரத் பவார் ஒரு மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய வேளாண்துறை அமைச்சர். ஆகவே, பிரதமரைச் சந்தித்து நாட்டில் விவசாயிகளின் துயரங்களைப் பற்றி அவருக்குத் தெரிவிக்க தலைவர்கள் குழுவை வழிநடத்துமாறு நான் அவரிடம் கேட்டுக்கொண்டேன்" என்றார்.

தொடர்ந்து கூட்டணி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, மகாராஷ்டிராவில் விரைவில் சிவசேனா தலைமையிலான ஆட்சி அமையும் என்று மட்டும் கூறியபடி விலகி சென்றார். 

சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான நிலைப்பாட்டில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. முன்னதாக சோனியா காந்தியைச் சந்தித்த சரத் பவார், மகாராஷ்டிர அரசியல் நிலையைப் பற்றித் விரிவாக விளக்கினார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகளும் காங்கிரஸ் நிர்வாகிகளும் டெல்லியில் மீண்டும் சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்,” என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளளார். 

.