“ஐயா நியாயமார்களே..! நல்லோர்களே..!! - பதில் சொல்லுங்கள்”- சீமான் கேட்கும் கேள்வி

"உலகமெல்லாம் எல்லா வழிபாட்டுத் தலங்களும் மூடியிருக்கும் பொழுது மருத்துவமனைகளின் கதவுகள் 24 மணி நேரமும் திறந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்..”

“ஐயா நியாயமார்களே..! நல்லோர்களே..!! - பதில் சொல்லுங்கள்”- சீமான் கேட்கும் கேள்வி

"ஐயா நியாயமார்களே, நல்லோர்களே, உங்களிடம் ஒரே ஒரு கேள்வி.. இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.."

நடிகை ஜோதிகா, விருது வழங்கும் விழா ஒன்றில், “கோயில்களுக்கு செலவு செய்வதுபோல கல்வி மற்றும் மருத்துவமனைகளுக்கும் செலவு செய்யலாம்,” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து அவரது கணவர் நடிகர் சூர்யா, “ஜோதிகா சொன்னதில் உறுதியாக இருக்கிறோம். பின் வாங்க முடியாது,” என்று அறிக்கை வெளியிட்டார். இந்தப் பிரச்னையை சுட்டிக்காட்டி தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். 

அவர், “ஊரடங்கால் 45 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் பசி, பட்டினியோடு உறங்கும்போது வராத கோபம், 

பேரிடர் காலத்திலும் மத்தியில் அதிகாரத்தைக் குவித்து, மாநிலங்கள் பாதுகாப்புச் சாதனங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்குக் கூடத் தடை விதிக்கிறபோது வராத கோபம், 

கையுறையும் பாதுகாப்புச் சாதனங்களும் சரிவரக் கிடைக்காதபோது மருத்துவர்களுக்காகக் கைதட்டுங்கள் எனக் கூறி கொண்டாட்ட மனநிலையை மக்களிடையே உருவாக்க முயன்றபோது வராத கோபம், 

நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளிவிட்டு தனிப்பெரு முதலாளிகளுக்கு 68,000 கோடியைத் தாரைவார்த்தபோது வராத கோபம்,

பல வருடம் போராடி பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தை எந்த வித முன் அறிவிப்புமின்றி அதன் தன்னாட்சியைப் பறித்து மத்திய அமைச்சரவைக்குக் கீழ் கொண்டு வந்த பொழுது வராத கோபம்,

நாம் கோயில்களுக்குச் செலவு செய்வதைப் போல கல்விக்கும், மருத்துவமனைகளுக்கும் செலவு செய்யலாம் என ஜோதிகா சூர்யா கூறியதற்கு வருகிறதா?

ஐயா நியாயமார்களே, நல்லோர்களே, உங்களிடம் ஒரே ஒரு கேள்வி.. இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்..

உங்களுக்கு வரக்கூடாது என்பது என் விருப்பம்… ஆனால் ஒருவேளை கொரோனா உங்களைத் தாக்கினால் நீங்கள் முதலில் கோயிலுக்குச் செல்வீர்களா? மருத்துவமனைக்குச் செல்வீர்களா? இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்..

உலகமெல்லாம் எல்லா வழிபாட்டுத் தலங்களும் மூடியிருக்கும் பொழுது மருத்துவமனைகளின் கதவுகள் 24 மணி நேரமும் திறந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்..” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.