This Article is From Mar 04, 2020

“என்னடா சட்டம்… ஏ.ஆர்.ரகுமான் சிறுபான்மையா..?”- சீமான் கேட்ட நெத்தியடி கேள்வி

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கு குறித்துப் பேசிய சீமான்...

“என்னடா சட்டம்… ஏ.ஆர்.ரகுமான் சிறுபான்மையா..?”- சீமான் கேட்ட நெத்தியடி கேள்வி

"இசுலாமியர்கள் என்பவர்கள் யாரோ கிடையாது. இந்த மண்ணின் மைந்தர்கள். தமிழர்கள்தான் இசுலாத்தை ஏற்றிருக்கிறார்கள்"

ஹைலைட்ஸ்

  • சிஏஏ, என்ஆர்சிக்கு எதிரான கூட்டத்தில் சீமான் பேசியுள்ளார்
  • இசுலாமியர்கள் மண்ணின் மைந்தர்கள்தான்: சீமான்
  • சுதந்திரப் போரில் இசுலாமியர்களின் பங்கு தவிர்க்க முடியாதது: சீமான்

சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, விக்கிரமசிங்கபுரம் அனைத்து ஜமாத்தார்கள் இணைந்து நடத்திய கண்டனப் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

தன் உரையின்போது சீமான், “மத்தியிலிருந்து கொண்டு இவர்கள் கொண்டு வரும் சட்டங்கள் வேடிக்கையாக இருக்கின்றன. காரணம், இவர்கள் சட்டப்படி இளையராஜா பெரும்பான்மை சமூகம். ஆனால், அவரின் மகன் யுவன் சங்கர் ராஜா சிறுபான்மையினராக மாற்றப்படுவார். அதேபோல ஏ.ஆர்.ரகுமான் சிறுபான்மையினர் என்பார்கள். ஆனால் அவரின் அக்கா மகன் ஜி.வி.பிரகாஷ் பெரும்பான்மைஞ் இதுதான் இவர்கள் சட்டத்தின் யோக்கியதை. அனைவரும் துக்ளக் இதழையே படிப்பவர்களாக இருப்பார்கள் போல. ஒவ்வொருவருக்கும் அறிவு காது வழியாக ஊற்றுகிறது,” என்று கிண்டலாகப் பேசினார்.

தொடர்ந்து சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கு குறித்துப் பேசிய சீமான், “இந்தியச் சுதந்திர வரலாற்றில் இசுலாமியர்களின் பங்களிப்பை எடுத்துவிட்டு உங்களால் வரலாற்றை எழுதவே முடியாது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கு என்ன. இவர்கள் மன்னிப்பு கேட்டே வாழ்க்கையை ஓட்டியவர்கள்.

ஆர்.எஸ்.எஸ்-ஐத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான கோல்வால்கர் சொல்லியிருக்கிறார், ‘உங்கள் ஆற்றலைச் சுதந்திரத்துக்காகச் செலவழிக்காதீர்கள். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு கிறித்துவர்கள், இசுலாமியர்களுக்கு எதிராக அதைப் பயன்படுத்த வேண்டும்,' என்று கூறியுள்ளார். இதுதான் இவர்களின் வரலாறு. 

இசுலாமியர்கள் என்பவர்கள் யாரோ கிடையாது. இந்த மண்ணின் மைந்தர்கள். தமிழர்கள்தான் இசுலாத்தை ஏற்றிருக்கிறார்கள். ஒரு மதத்தைத் தழுவியுள்ளார்கள். மதத்தை வைத்துப் பிளவுபடுத்த நினைத்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்,” என்று அதிரடியாகப் பேசினார். 


 

.