This Article is From Jul 09, 2019

சாந்தகுமார் கொலை வழக்கு: படுத்த படுக்கையாக நீதிமன்றத்தில் சரண் அடைந்தார் சரவணபவன் ராஜகோபால்!!

18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சாந்தகுமார் கொலை வழக்கு: படுத்த படுக்கையாக நீதிமன்றத்தில் சரண் அடைந்தார் சரவணபவன் ராஜகோபால்!!

உடல் நிலையை காரணம் காட்டி சரண் அடைவதில் இருந்து ராஜகோபால் காலம் தாழ்த்தினார்.

சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் படுத்த படுக்கையாக சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர் சிறைக்கு செல்வாரா அல்லது சிகிச்சை பெறுவதற்கு அனுமதிக்கப்படுவாரா என்பது குறித்து நீதிமன்றம்தான் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொலை வழக்கில், சரவண பவன் உரிமையாளர் பி.ராஜகோபாலுக்கு (P Rajagopal) ஆயுள் தண்டனையை சில நாட்களுக்கு முன்னர் உறுதி செய்யதது உச்ச நீதிமன்றம். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையின்படி ராஜகோபால், 2 நாட்களுக்கு முன்னர் சரணடைந்திருக்க வேண்டும். 

ஆனால், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார் ராஜகோபால். இது குறித்து உச்ச நீதிமன்றத்திடமும் தெரிவத்து, சரணடையும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரினார். அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ள நீதிமன்றம், உடனடியாக சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. 

இந்த நிலையில் ராஜகோபால் சரண் அடைந்திருக்கிறார். இந்த வழக்கின் பிரச்னை 1990-களில் ஆரம்பிக்கிறது. சரவண பவன், சென்னை கிளையில் பணி புரிந்து வந்த துணை மேலாளரின் மகளான ஜீவஜோதியை திருமணம் செய்ய ஆசைபட்டுள்ளார் ராஜகோபால். 

ஜீவஜோதிக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இருக்கவில்லை. அந்த சமயத்தில் ராஜகோபாலுக்கு, இரண்டு மனைவிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து 1999 ஆம் ஆண்டு ஜீவஜோதி, சாந்தகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராஜகோபால், இளம் தம்பதியை விவாகரத்து செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

2001 ஆம் ஆண்டு, ஜீவஜோதி மற்றும் சாந்தகுமார் தம்பதி, ராஜகோபால் தரப்பிடமிருந்து தங்களுக்கு மிரட்டல் வருவதாக காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகார் அளிக்கப்பட்டு அடுத்த சில நாட்களில் சாந்தகுமார் கடத்தி கொல்லப்படுகிறார். சாந்தகுமார், கொடைக்கானல் காட்டில் இருக்கும் பெருமாள்மலையில் கொன்று புதைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அந்த வழக்கில் நீதிமன்றம், ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

2009 ஆம் ஆண்டு, அவருக்கு வழக்கில் பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றம், அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், உயர் நீதிமன்றத் தீர்ப்பு செல்லும் என்று கூறியது.

.