சபரிமலை விவகாரம்: தீர்ப்புக்கு எதிராக அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்யாது! - பினராயி விஜயன்

சபரிமலை விவகாரம் தொடர்பான விவாதத்திற்கு கேரள அரசு எப்போதும் தயாராக உள்ளது என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சபரிமலை விவகாரம்: தீர்ப்புக்கு எதிராக அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்யாது! - பினராயி விஜயன்

பதட்ட சூழ்நிலையை உருவாக்குவதற்கு அரசியல் ரீதியாக தூண்டிவிடப்படுகின்றனர்.

Thiruvananthapuram:

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு உறுதியாக நிறைவேற்றும் என்றும் தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்யாது எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்களும், 10 வயதுக்கு உட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே செல்லலாம் என்ற நடைமுறை இருந்து வந்தது. இந்தநிலையில், வழிபாட்டில் ஆண், பெண் பேதம் இல்லை எனக்கூறி இந்தத் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து வயது பெண்களும் கோயிலுக்கு செல்லலாம் என தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், முதலமைச்சர் பினராயி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதன் பின் முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கேரளாவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்ட போது கூட கேரள மக்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டனர். அப்படியிருக்கும் போது, இந்த ஒற்றுமையை சீர்குலைக்க சிலர் வேண்டுமென்றே செயல்படுகின்றனர். இந்த அரசு மதநம்பிக்கைகளையும், மதநல்லிணக்கத்தையும் பாதுகாத்து வருகிறது.

மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்றே சில சக்திகள் மத உணர்வுகளை தூண்டிவிட்டு அரசாங்கத்துக்கு சிக்கலை உருவாக்க நினைக்கின்றன. எல்லா சிக்கல்களையும் அரசு சரியாக கையாண்டு எதிர்கொள்ளும். மேலும், சபரிமலை விவகாரம் தொடர்பான விவாதத்திற்கு கேரள அரசு எப்போதும் தயாராக உள்ளது.

மேலும், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு உறுதியாக நிறைவேற்றும். உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதே அரசின் கடமை. அதனால், சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்யாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.