This Article is From Aug 10, 2020

“இதுக்குதாங்க 3 மொழிக் கொள்கை தேவை…”- கனிமொழியின் 'இந்தி பிரச்னைக்கு' எஸ்.வி.சேகரின் தீர்வு

“இதற்காகத்தான் 3 மொழக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும். அதன் மூலம் எதிர்காலத்தில் வரும் சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் தமிழைக் கற்க முடியும்"

“இதுக்குதாங்க 3 மொழிக் கொள்கை தேவை…”- கனிமொழியின் 'இந்தி பிரச்னைக்கு' எஸ்.வி.சேகரின் தீர்வு

"இந்தி இல்லாமல் இந்தியா என்கிற வார்த்தையையே உங்களால் உச்சரிக்க முடியாது”

ஹைலைட்ஸ்

  • 'சிஐஎஸ்எஃப் அதிகாரி, என்னை இந்தியரா எனக் கேட்டார்'- கனிமொழி
  • சென்னை விமான நிலையத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதாக தகவல்
  • 'கனிமொழிக்கு நடப்பது ஒன்றும் புதிதல்ல'- ப.சிதம்பரம்

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். பயணத்திற்கு முன்னதாக சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கனிமொழியிடம் இந்தியில் கேள்வி கேட்டுள்ளார். கனிமொழி, தனக்கு இந்தி தெரியாது என்றும், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டுள்ளார். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியர்தானே என கேள்வியெழுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பவத்தையடுத்து கனிமொழி, தன் ட்விட்டர் பக்கத்தில், “இன்று விமான நிலையத்தில் ஒரு சிஐஎஸ்எஃப் அதிகாரியிடம், இந்தி தெரியாது என்றும், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறும் கேட்டேன். அதற்கு அவர், ‘நீங்கள் இந்தியர்தானா?' எனக் கேட்டார். எப்போதிலிருந்து இந்தியராக இருப்பதென்றால், இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை உருவானது என தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” எனக் கூறி #hindiimposition என்கிற ஹாஷ் டேக்கை பதிவிட்டிருந்தார். 

இதைத் தொடர்ந்து சிஐஎஸ்எஃப் தரப்பு, ‘இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். எந்த ஒரு குறிப்பிட்ட மொழியையும் திணிப்பது எங்கள் பாலிசியில் இல்லை' என்று விளக்கம் அளித்துள்ளது. அதற்கு கனிமொழி, நன்றி தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவத்தை அடுத்துப் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கனிமொழிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். 

இந்நிலையில் எஸ்.வி.சேகர், “இதற்காகத்தான் 3 மொழக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும். அதன் மூலம் எதிர்காலத்தில் வரும் சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் தமிழைக் கற்க முடியும். எப்படி தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உருது மொழி பயிற்றுவிக்கப்படுகிறதோ, அதேபோல நீங்கள் இந்தியை அரசு பள்ளியில் பயிற்றுவிப்பதற்கும் ஆதரவு தெரிவிக்கலாம். இந்தி இல்லாமல் இந்தியா என்கிற வார்த்தையையே உங்களால் உச்சரிக்க முடியாது” என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

புதிய கல்விக் கொள்கையில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் இரு மொழிக் கொள்கைக்கு பதிலாக மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைச் சுட்டிக்காட்டும் விதமாகவே எஸ்.வி.சேகர் பதிவிட்டுள்ளார். 


 

.