This Article is From Sep 21, 2018

திமுகவுக்கு எதிராக இலங்கை தமிழர் பிரச்னையை கையில் எடுக்கும் அதிமுக

திமுகவுக்கு எதிராக 25-ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அதிமுக அறிவித்துள்ளது. இலங்கை போர்க்குற்றங்களுக்கு திமுகவே காரணம் என்கிறது அதிமுக

திமுகவுக்கு எதிராக இலங்கை தமிழர் பிரச்னையை கையில் எடுக்கும் அதிமுக

தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவுக்கு எதிராக ஆளும் அதிமுக வரும் 25-ம்தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. 2009-ல் இலங்கையில் நடந்த இனப்படுகொலை, மனித உரிமை மீறல்களுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளே காரணம் என குற்றம்சாட்டி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது.

இலங்கை இறுதியுத்தம் குறித்து முன்னாள் இலங்கை அதிபர் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு 2009-ல் இருந்த இந்திய அரசாங்கம் தங்களுக்கு உதவி செய்ததாக கூறியிருந்தார். செப்டம்பர் 12-ல் சுப்ரமணியசாமி டெல்லியில் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற ராஜபக்சே இவ்வாறான கருத்தை கூறினார். 2009-ம் ஆண்டின்போது மத்தியில் காங்கிரசும், மாநிலத்தில் திமுகவும் ஆட்சிப்பொறுப்பில் இருந்தன.

இந்த நிலையில்தான் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து 25-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறது. சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தேனியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஓ. பன்னீர் செல்வமும், கரூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு தம்பி துரையும் தலைமை வகிப்பார்கள் என்று அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 19-ம் தேதி நடைபெற்ற அதிமுக கூட்டத்தின்போது, இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு திமுகவும், காங்கிரசுமே காரணம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. தீர்மானத்தில், ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும், தமிழ் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதற்கும் திமுக - காங்கிரஸ் கட்சிகளுமே காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே அதிமுகவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், “ஒவ்வொரு முறையும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும்போது அதனை திசை திருப்பும் வேலையில் அதிமுக ஈடுபடும். அந்த வகையில்தான் தற்போது ஆர்ப்பாட்ட அறிவிப்பு வெளிவந்துள்ளது என்றார். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோருக்கு எதிராக ஊழல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்துள்ளது. இது அரசியல் காழ்ப்புணர்வு என்று கூறி அதிமுக மறுத்து வருகிறது



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.