This Article is From Dec 17, 2018

ஆர்.கே நகர் பணப்பட்டுவாடா புகார்: குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லையா? உயர்நீதிமன்றம்

ஆர்.கே நகர் பணப்பட்டுவாடா புகாரில் குற்றவாளிகள் யார் என கண்டுபிடிக்க முடியவில்லையா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆர்.கே நகர் பணப்பட்டுவாடா புகார்: குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லையா? உயர்நீதிமன்றம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடந்தபொழுது பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது என புகார்கள் எழுந்தன. இதில் ஆளுங்கட்சி சார்பில் ரூ.79 கோடிக்கு மேல் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டு பின்னர் மறுதேர்தல் நடந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தமிழக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரில் குற்றவாளி யார் என கண்டுபிடிக்க முடியவில்லையா? இந்த விவகாரத்தில் எஃப்ஐஆரில் ஏன் ஒருவரை கூட சேர்க்கவில்லை?

பணப்பட்டுவாடா புகாரில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 3 பேரின் பெயர்கள் உள்ளன. அப்படி இருந்தும் பெயரிடப்படாத எஃப்ஐஆராக இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 883 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. வருமான வரித்துறை அளித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூவரின் பெயரை ஏன் அடையாளம் காண முடியவில்லை? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

வாக்காளர்களுக்கு பணம் அளித்தது யார்? தேர்தல் ஆணையம் அளித்த புகாரிலேயே இந்த நிலை என்றால் சாதாரண மக்கள் நிலை என்னவாகும் என கேள்வி எழுப்பினர்.

இதுபற்றி தேர்தல் ஆணையம், தமிழக அரசு வருமானவரித்துறை பதிலளிக்க வேண்டும் என அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

.