This Article is From Sep 04, 2018

ஓய்வு பெற்ற காவலர் அடித்துக் கொலை… அலகாபாத்தில் கொடூரம்!

அப்துலை தாக்கிய நபர் ஜுனைத் என்றும் அவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது

Allahabad:

உத்திர பிரதேச மாநிலத்தின் அலகாபாத்தின் தெரு ஒன்றில் ஓய்வு பெற்ற காவலர் 3 நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்துள்ளார். இந்த சம்பவம் சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது. அப்போது, சுற்றி இருந்த பொது மக்கள், காவலர் தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்துள்ள அவலமும் நடந்துள்ளது.

தாக்கப்பட்ட காவலருக்கு 70 வயது என்றும் அவரது பெயர் அப்துல் சமாத் கான் என்றும் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கு பின்னர் அப்துல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

சிசிடிவி பதிவில், அப்துல் சைக்கிளுடன் வருவது தெரிகிறது. அப்போது சிவப்பு நிற டி-ஷர்ட் அணிந்து வரும் நபர் ஒரு கொம்பைக் கொண்டு அப்துலை சரமாரியாக தாக்குகிறார். இதையடுத்து அப்துல், தாக்குதலில் இருந்து தப்பிக்க கையை வைத்து தடுக்கிறார். மேலும் இருவர் அப்துலை தாக்கத் தொடங்குகின்றனர். ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாமல் அப்துல், மயக்க நிலையில் கிடக்கிறார்.

is6t6bjg

சிறிது நேரம் கழித்து அப்துல் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழக்கிறார்.

அப்துலை தாக்கிய நபர் ஜுனைத் என்றும் அவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சொத்து தகராறு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கலாம் என்று உள்ளூர் போலீஸ் சந்தேகப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, 10 நபர்களின் பெயர் அதில் சேர்க்கப்பட்டுள்ளது.

.