This Article is From Jan 13, 2019

'விருப்பப்படி செயல்படுங்கள்'- கூட்டணி முறிவு குறித்து மாயாவதி, அகிலேஷுக்கு ராகுல் பதில்

மாயாவதியும், அகிலேஷ் யாதவும் ஆற்றல் மிக்க தலைவர்கள் என்றும் அவர்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்கிரசை புறக்கணிப்பதால் அதிருப்தி அடையப்போவதில்லை என்று ராகுல் கூறியுள்ளார்.

New Delhi:

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளன. அந்த கூட்டணியில் காங்கிரசுக்கு இடம் இல்லை என்று கூறப்பட்டுள்ள நிலையில், விருப்பப்படி செயல்படுங்கள் என்றும், காங்கிரசை புறக்கணித்ததால் அதிருப்தி ஏதும் இல்லை என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் கட்சி அல்லது கூட்டணி தேசிய அரசியலில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றன.

இங்கு சக்திமிக்க மாநில கட்சிகளான பகுஜன் சமாஜும், சமாஜ்வாதியும் இதுவரை எதிர் எதிர் அணியில் நின்று மக்களவை தேர்தலை சந்தித்தன. இரு கட்சிகளும் மாநில ஆட்சியில் இருந்திருக்கின்றன. ஆனால் தனித்து செயல்பட்டதால் கடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 72 தொகுதிகளை பாஜகவிடம் இந்த கட்சிகள் இழந்தன.

இந்த நிலையில் அதிரடி திருப்பமாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜும் கூட்டணி அமைத்திருக்கின்றன. இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு இடம் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருப்பது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதுதொடர்பாக துபாய் சென்றிருக்கும் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ''சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணியில் இடம்பெறாமல் போனதற்காக எங்களுக்கு அதிருப்தி ஏதும் இல்லை. உத்தரப்பிரதேசத்தி என்ன செய்ய வேண்டும் என்று அகிலேஷும், மாயாவதியும் முடிவு எடுத்து விட்டார்கள்.

நாங்கள் எங்கள் முடிவின்படி செயல்படுவோம். இரு தலைவர்கள் மீதும் எனக்கு மிகுந்த மதிப்பு, மரியாதை இருக்கிறது. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய சொந்த விருப்பம். அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அவர்கள் விருப்பப்படி செயல்படட்டும். மற்ற மாநிலங்களில் வலுவான கூட்டணியை காங்கிரஸ் அமைக்கும்.

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியால் பாஜகவுக்கு கடும் இழப்பு ஏற்படும். இருப்பினும், இந்த இரு கட்சி தலைவர்கள் காங்கிரசைப் பற்றி தவறாக சிலவற்றை கூறிவிட்டனர்.'' என்று கூறினார்.
 

.