This Article is From Dec 02, 2019

மிக கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், நாளை ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. 

இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், கிழக்கு நோக்கி வீசும் காற்றின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் கன மழையில் இருந்து மிகவும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறியது.

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு நோக்கி நகரும் என்றும் அதனால் கேரள மாநிலத்தில் மழையின் அளவு அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், நாளை ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நிர்வாக ரீதியாக அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த ரெட் அலர்ட் ஆனது, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இந்த பகுதிகளில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குமரிகடல் முதல் தென்கிழக்கு வங்கக்கடல் வரை நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நேற்று தமிழகம் முழுவதும் நல்ல மழை பதிவானது. இதனை தொடர்ந்து இன்று காலை முதல் நாள் முழுவதும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

.