ஏ.டி.எம்மில் எலிகள் 12 லட்சம் ரூபாய் கடித்து குதறல், சர்ஜிக்கல் ஸ்டிரைக்

அசாம் மாநிலத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்மில் இருந்த நோட்டுகளை எலிகள் குதறிய சம்பவம் ட்விட்டரில் வைரலானது

ஏ.டி.எம்மில் எலிகள் 12 லட்சம் ரூபாய் கடித்து குதறல், சர்ஜிக்கல் ஸ்டிரைக்
New Delhi: அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்மில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை எலிகள் குதறித் தள்ளிய சம்பவம் ட்விட்டரில் வைரலானது.

12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளை கடித்து குதறியுள்ளது எலி. தின்சுகியா மாவட்டம் லாய்புலி பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரம் கடந்த மே 20 ஆம் தேதி முதல் பழுதடைந்த நிலையில் இருந்து வந்துள்ளது. அதற்கு முன், தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் 29.48 லட்சம் மதிப்புள்ள 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பிச் சென்றுள்ளனர்.

ஜூன் 11 ஆம் தேதி, பழுதடைந்த ஏ.டி.எம் இயந்திரத்தை பார்வையிட வந்து அதிகாரிகள், 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் கிழிந்து தூள் ஆகியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 12,38,000 ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் சேதம் அடைந்திருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மேலும், 17.10 லட்சம் மதிப்புள்ள நோட்டுகள் பாதுகாப்பாக கைப்பற்றப்பட்டுள்ளது.

உள்ளூர் செய்தியாளர் நந்தன் பிரதிம் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், கிழிந்த பணத்தாள்களுக்கு நடுவில் இறந்த எலி இருப்பது போன்ற வீடியோவை பதிவேற்றினார். உடனே ட்விட்டரில் இந்த வீடியோ வைரலானது. அந்த ஏ.டி.எம், எச்.டி.எஃப்சி வங்கியுனுடையது என தகவல் பரவ, அது தங்கள் வங்கியின் ஏ.டி.எம்மில் நடைப்பெறவில்லை என எச்.டி.எஃப்சி வங்கி தலைமை விளக்கம் அளிக்கும் அளவு ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டது.
 
இது குறித்து ட்விட்டரி வந்த சில பதிவுகள் இங்கே
 
"எலிகளுக்கான பண மதிப்பு நீக்கம் நடைப்பெற்றுள்ளது" எனவும், "பாரத ஸ்டேட் வங்கியின் மீது எலிகள் நடத்திய 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' எனவும் ட்விட்டரில் பலர் பதிவிட்டனர்.

"கடந்த ஜூன் 11 ஆம் தேதி பழுதடைந்த ஏடிஎம் இயந்திரத்தை சரிபார்க்க வந்த அதிகாரிகள் , சேதமடைந்த பண நோட்டுகளையும், இறந்து போன எலியையும் கண்டுள்ளனர்" என காவல் துறை அதிகாரி முக்தா ஜோதி மஹாநந்தா தெரிவித்தார்.
 
குறைந்த காலத்தில், ரூபாய் நோட்டுகளை எலிகள் சேதப்படுத்த வாய்ப்புகள் உள்ளதா என சந்தேகமும் எழுந்துள்ள நிலையில், காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.Click for more trending news