கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏராளமான வழிவாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.
ஹைலைட்ஸ்
- புரி ஜெகன்நாத் கோயில் ரத யாத்திரைக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
- தேரோட்டம் நடத்த வலியுறுத்தும் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- கடும் விதிமுறைகள் பின்பற்றப்படும் என ஒடிசா அரசு தகவல்
New Delhi: ஒடிசா மாநிலம் புரி ஜெகன்நாத் கோயில் தேரோட்டத்தை கட்டுப்பாடுகளுடன் நடத்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக முன்பு புரி ஜெகன்நாத் கோயில் தேரோட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது இந்த புதிய உத்தரவு வெளியாகியுள்ளது.
தீர்ப்பு வெளியானதும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், 'ஜெய் ஜெகன்நாத்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். #RathYatra என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
'ஒடிசா மக்கள் சார்பாகவும், அரசு சார்பாகவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். மத்திய அரசு வகுத்த அனைத்து விதிகளையும் கடைபிடித்து ரத யாத்திரை நடத்தப்படும். இதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொள்ளும்' என்று மாநில அமைச்சர் அருண் சாஹு தெரிவித்துள்ளார்.
அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில், 'இன்று மிகவும் சிறப்புக்குரிய நாள். குறிப்பாக ஒடிசாவை சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கும், புரி ஜெகன்நாத் பக்தர்களுக்கும் முக்கியமான நாள். ரத யாத்திரை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பை நாடே வரவேற்கிறது' என்று கூறியுள்ளார்.
ஒடிசாவின் கடற்கரை பகுதியில் அமைந்திருக்கும் புரி மாவட்டத்தில் ஜெகன்நாத் கோயில் உள்ளது. இங்கு நடைபெறும் தேரோட்டத்தில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏராளமான வழிவாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்த சூழலில் கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, பாதிப்பு இல்லாதவர்கள் மட்டுமே கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.