This Article is From Sep 24, 2018

தாமதமாகும் எழுவர் விடுதலை; ஆளுநரை சந்தித்த அற்புதம்மாள்

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது

தாமதமாகும் எழுவர் விடுதலை; ஆளுநரை சந்தித்த அற்புதம்மாள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்து மனு அளித்தார். மனுவில் எழுவர் விடுதலை குறித்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிசந்திரன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 27 வருடங்களாக சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகிய மூவர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

அப்போது, ‘குற்றம் சுமத்தப்பட்ட 7 பேர் குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உரிமையுண்டு. அவர்கள் ஆளுநருக்கு விடுதலை குறித்து பரிந்துரை செய்யலாம்’ என்று தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்தது தமிழக அமைச்சரவை. இதுவரை ஆளுநர் பரிந்துரை குறித்து முடிவெடுக்காமல் இருக்கிறார். மேலும் அவர், ‘இந்த விவகாரம் குறித்து நியாயமான முறையில் முடிவெடுப்பேன்’ என்றும் கருத்து கூறியுள்ளார்.

எழுவர் விடுதலை குறித்து தொடர்ந்து சிக்கல் நீடித்து வரும் நிலையில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் சென்னை, கிண்டியில் இருக்கும் ராஜ்பவனுக்குச் சென்று ஆளுநர் புரோகித்தை சந்தித்தார். அப்போது அவர் ஒரு மனுவையும் ஆளுநரிடம் கொடுத்தார்.

அந்த மனுவில், நீதிபதி கே.டி.தாமஸ், பேரறிவாளன் விஷயத்தில் தவறு நடந்துள்ளதை சுட்டிக்காட்டிய விவரங்களையும், சிறையில் பேரறிவாளனின் நடத்தைக் குறித்தான ஆவணங்களையும் சமர்பித்தார்.

ஆளுநரை சந்தித்தப் பிறகு அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘தமிழக அமைச்சரவையின் பரிந்துரை ஆணை, ஆளுநரிடம் தான் உள்ளது. அதற்கு அவர் ஒப்புதல் தர வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். அது குறித்து தான் நான் ஆளுநரை சந்தித்து கோரிக்கை வைத்தேன். எனது மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசினார். எனவே அமைச்சரவையின் முடிவை அவர் ஏற்று எனது மகனை விடுதலை செய்வார் என்று நம்புகிறேன். அவர் அமைச்சரவையையும் உச்ச நீதிமன்றத்தையும் மதித்து நடப்பார்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.