This Article is From Jun 05, 2018

'கபாலியா? காலாவா?' - ரஜினிக்குப் பிடித்தப் படம் எது தெரியுமா?

இன்னும் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த `காலா' திரைப்படம்

'கபாலியா? காலாவா?' - ரஜினிக்குப் பிடித்தப் படம் எது தெரியுமா?

ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்

ஹைலைட்ஸ்

  • வரும் 7-ம் தேதி காலா ரிலீஸ் ஆகிறது
  • கர்நாடகாவில் காலா-வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
  • ரஞ்சித்-ரஜினி காம்போவில் வரும் இரண்டாவது திரைப்படம் காலா
Hyderabad:

இன்னும் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த `காலா' திரைப்படம். இதற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடந்தது. அப்போது, உங்களுக்கு கபாலி பிடிக்குமா؟ அல்லது காலாவா؟ என்று கேட்டதற்கு உற்சாகமான ஒரு பதிலை தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் - ரஜினிகாந்த் கூட்டணியில் கடைசியாக `கபாலி' திரைப்படம் வந்தது. இந்தப் படம் பட்டித் தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்நிலையில், மீண்டும் இருவர் கூட்டணியில் காலா திரைப்படம் வர உள்ளது. முதலாவது திரைப்படத்தில் ரஜினி மலேசியாவைச் சேர்ந்த டான். அதில் கோட்-சூட் உடன் படு கலக்கலாக வந்து மாஸ் காட்டினார் சூப்பர் ஸ்டார். 
 


காலா திரைப்படத்தின் கதைக்களம் மும்பையில் இருக்கும் குடிசைப்பகுதியான தாராவியை மையமாகக் கொண்டது. இது தான் உலக அளவில் இருக்கும் மூன்றாவது மிகப் பெரிய ஸ்லம் என்று கூறப்படுகிறது. தாராவிக்கே போய் படம் பிடிக்காமல், சென்னையில் தாராவி செட் போடப்பட்டது. அங்கு விறுவிறுவென நடந்த ஷூட்டிங்கை அடுத்து, இன்னும் இரண்டு நாட்களில் வெள்ளிதிரையை அலங்கரிக்க உள்ளது காலா. இந்தப் படத்திலும் ரஜினி `ரௌடி'-யாகத்தான் நடிக்கிறார். தமிழகத்தின் திருநெல்வேலியை ரஜினியின் கதாபாத்திரம் பூர்விகமாகக் கொண்டிருக்கும் வகையில் கதை உருவாக்கப்பட்டு உள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் காலா-வின் இசை வெளியிடப்பட்டு வைரலானது. தற்போது, படக்குழு காலா-வை ப்ரமோட் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. நேற்று ஐதராபாத்தில் இந்தப் படத்துக்கான ப்ரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. இதில் ரஜினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, `தாராவிக்கே போய் படப்பிடிப்பு நடத்தாமல், சென்னையில் அதற்கான செட் போடப்பட்டது. அதில் நடித்தது எப்படி இருந்தது' என்று என்.டி.டி.வி நிருபர் கேட்ட கேள்விக்கு, `மிகவும் வித்தியாசமான அனுபவம். அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தாராவியிலேயே இருந்தது போன்ற உணர்வை அந்த செட் எனக்குத் தந்தது' என்றவரிடம், `ரஞ்சித்துடன் சேர்ந்து இரண்டாவது படம் செய்கிறீர்கள். உங்களுக்கு கபாலி பிடிக்குமா..؟ காலா பிடிக்குமா..؟' என்றதற்கு, `காலா… காலாதான்… கபாலியைவிட காலாதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனது ரசிகர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும்' என்றார் உற்சாகத்துடன். 



காலா-வுக்கு பல தளங்களில் ஆதரவு இருக்கும் போதும், கர்நாடகத்தில் இந்தப் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி தொடர்பாக ரஜினிகாந்த் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகத்தில் திரைப்படங்களை நிர்வகிக்குக்கும் அமைப்பு காலா-வுக்கு தடை வதித்தது. இதை எதிர்த்து கர்நாடக நீதிமன்றத்தில் ரஜினி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

.