This Article is From Jun 06, 2018

காவிரி பிரச்சனைக்காக 'காலா'வை எதிர்ப்பது சரியல்ல! - ரஜினிகாந்த்

`காலா' படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அம்மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது

காவிரி பிரச்சனைக்காக 'காலா'வை எதிர்ப்பது சரியல்ல! - ரஜினிகாந்த்

Rajinikanth reportedly said whichever government comes to power, Karnataka should release Cauvery waters.

ஹைலைட்ஸ்

  • காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை
  • கர்நாடக திரைப்பட வர்த்தக் சபை எதிர்ப்பு
  • காவிரிக்கு குரல் கொடுத்ததற்காக காலாவை எதிர்ப்பது சரியல்ல என ரஜினி கருத்து
Bengaluru: நடிகர் மற்றும் அரசியல்வாதியான ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் காலா நாளை வெளியாகிறது. இப்படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என சர்ச்சைகள் கிளம்பியிருப்பதால், படம் ஓடும் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு, படத்தின் தயாரிப்பு நிறுவனம் வுன்டர்பார் சார்பாக, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்று உயர்நீதிமன்றம், `காலா' படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அம்மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், காவிரி தொடர்பான பிரச்சனையில் ரஜினி கூறிய கருத்துக்காக அவருக்கு இன்னும் பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதன் எதிரொலியாக ரஜினியின் காலா படத்தை வெளியிடக்கூடாது என பலத்த எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. இது குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறுகையில், "கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, காலா படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. படத்தை திரையிட்டால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாநிலத்தின் அமைதிக்காக `காலா'வை திரையிடாமல் இருப்பதுதான் நல்லது எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், `காலா' படத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கர்நாடக நீதிமன்றத்தின் உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை. உத்தரவு நகல் கிடைத்தவுடன் திரையரங்குகளுப்பு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் சாரா கோவிந்த் கூறுகையில், "காவிரி தொடர்பாக இரு மாநில அரசுகள், விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினி கூறவேண்டும். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் வேண்டாம் எனவும் ரஜினி கூறவேண்டும்" எனத் தெரிவித்தார்.

காவிரி குறித்து பேசியதற்காக காலாவை எதிர்ப்பது சரியல்ல என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்திருக்கிறார் ரஜினி. இந்தப் பிரச்சனைகுறித்து பத்திரிகையாளர்களிடம் ரஜினிகாந்த் கூறியதாவது, " `காலா' படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என கர்நாடகாவில் பிரச்சனை செய்துவருகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம், காவிரி மேலாண்மை என்ன சொன்னதோ அதைக் கர்நாகடா செய்யவேண்டும் எனக் கூறியிருந்தேன். அது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு. அப்படி நான் கூறியதில் என்ன தவறு இருக்கிறது எனத் தெரியவில்லை. ஆணை கட்டுகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் எனக் கூறினேன், அது என்னுடைய கருத்து. இதற்காக படத்தை வெளியிடக்கூடாது என சொல்வது சரியல்ல. இதற்கு கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையே துணை நிற்பது ஆச்சர்யம் அளிக்கிறது. காரணம் திரைப்பட வர்த்தக சபையின் வேலையே படத்தை எந்த பிரச்சனையும் இன்றி வெளியிட உதவுவதுதான். கூடவே கர்நாடகாவில் படத்தை வெளியிடுவது என்பதை நாங்கள் வீம்புக்காக செய்யவில்லை. உலகம் முழுக்க வெளியிடும் படத்தைதான் அங்கேயும் வெளியிடுகிறோம். மற்ற இடங்களில் வெளியாகி கர்நாடாகாவில் இந்தக் காரணத்துக்காக வெளியாகவில்லை என்பது முறையாக இருக்காது. படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதிகாப்பு அளிக்க வேண்டும் என்கிற உயர்நீதிமன்ற உத்தரவை, முதல்வர் குமாரசாமி அவர்கள் செயல்படுத்த வேண்டும். அவரது சூழல் என்ன என்று எனக்குப் புரிகிறது. போராட்டம் நடத்துபவர்களும் இந்த சூழலைப் புரிந்து படத்தை வெளியிட உதவவேண்டும்" எனக் கூறினார் ரஜினி.
.