This Article is From Jan 21, 2020

ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!!

துக்ளக் பத்திரிகையின் 50-வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெரியார் அமைப்புகள் வலியுறுத்த, அவரோ மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று அறிவித்திருக்கிறார்.

ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!!

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ரஜினிகாந்த் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி, “1971 ஆம் ஆண்டு சேலத்தில், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பெரியார் ஒரு பேரணியை நடத்தினார். அதில் கடவுகளான ராமர் மற்றும் சீதா ஆகியோரின் நிர்வாணச் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. இது குறித்து எந்த செய்தித் தாள்களும் செய்தி வெளியிடவில்லை. 

ஆனால், சோ ராமசாமி தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த துக்ளக் இதழ் மட்டும்தான் இது குறித்து செய்தி வெளியிட்டு விமர்சனம் செய்திருந்தது. அப்போது ஆட்சியிலிருந்த கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு இந்த செயலால் அரண்டுபோனது. துக்ளக் இதழின் பிரதிகளை மாநில அரசு பறிமுதல் செய்தது. அப்படி இருந்தும் மீண்டும் இதழ்களை அச்சடித்து விநியோகம் செய்தார் சோ. அது மிக அதிகமாக விற்றது,” என்று சர்ச்சையாக பேசினார். 

ரஜினியின் இந்தப் பேச்சுக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இன்று சென்னையில் இருக்கும், தனது போயஸ் தோட்டம் இலத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, “1971 ஆம் ஆண்டு பெரியார் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை, இல்லாத ஒன்றை நான் பேசிவிட்டதாக ஒரு சர்ச்சை கிளப்பப்படுகிறது. நான் அப்படி எதுவும் பேசவில்லை. இதோ என் கையில் ‘அவுட்லுக்' பத்திரிகையை வைத்துள்ளேன். நான் பேசியதற்குச் சான்றாக இந்த பத்திரிகையிலேயே தகவல்கள் உள்ளன. எனவே, பெரியார் குறித்து பேசியதற்கு என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இதற்கிடையே, பெரியார் குறித்து அவதூறு பரப்புவதாக கூறி ரஜினி மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிட விடுதலைக் கழகத்தின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும், இந்த புகாரின் அடிப்படையில் ரஜினி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று தெரிகிறது. 

இந்த நிலையில், ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய திருவல்லிக்கேணி போலீசாருக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிட விடுதலைக் கழகம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவில், பெரியார் குறித்து பொய்யான தகவலை பரப்பி களங்கம் ஏற்படுத்தும் நோக்குடன ரஜினி பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் ரஜினி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரியார் குறித்து ரஜினி தெரிவித்த கருத்து தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். 

.