This Article is From Jul 26, 2018

மரணப்படுக்கையில் ஹுமாயுன் என்ன சொன்னார் தெரியுமா? - ராஜஸ்தான் பாஜக தலைவர் புதிய தகவல்

பாஜக-வின் ராஜஸ்தான் மாநில தலைவரும் ராஜ்ய சபாவின் எம்.பி-யுமான மதன் லால் சயினி, ஹுமாயுன், பாபர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துதெரிவித்துள்ளார்

மரணப்படுக்கையில் ஹுமாயுன் என்ன சொன்னார் தெரியுமா? - ராஜஸ்தான் பாஜக தலைவர் புதிய தகவல்
Jaipur:

மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பாரதிய ஜனதா கட்சியின் ராஜஸ்தான் மாநில தலைவரும் ராஜ்ய சபாவின் எம்.பி-யுமான மதன் லால் சயினி, ஹுமாயுன் மற்றும் பாபர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். 

மதன் லால், ‘ஹுமாயுன் இறக்கும் தறுவாயில் இருக்கும் போது, பாபரை அழைத்தார். அப்போது ஹுமாயுன், இந்தியாவை நீ ஆட்சி செய்ய வேண்டுமென்று நினைத்தால் மூன்று விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். மாடு, பிராமணர்கள் மற்றும் பெண்களை மதிக்க வேண்டும்’ என்று நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று  பேசினார்.

ஆனால், இதில் ஒரு மிகப் பெரிய பிழை இருப்பதை மதன் லால் உணரவில்லை. அதில் முக்கியமானது, பாபர் தான் ஹுமாயுனின் தந்தை. மேலும் பாபர், 1531 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இது ஹுமாயுன் இறப்பதற்கு 25 ஆண்டுகள் முன்பு என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக-வினர் இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்வது இது முதல் முறையல்ல. நாட்டில் அதிகரித்து வரும் ‘பசுவதை’ கொலைகள் குறித்து பாஜக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்லி வருகின்றனர்.

தெலுங்கானாவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி டி.ராஜா சிங், ‘மாடுகளை, தேசியத் தாயாக அறிவிக்கும் வரை பசுவதை தாக்குதல்கள் ஓயாது’ என்றார்.

அதேபோல ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமார், ‘மாட்டுக் கறி சாப்பிடுவதை நிறுத்தினால், பசுவதை தாக்குதல்களும் நடக்காது’ என்று கூறினார்.

ஐதராபாத்தைச் சேர்ந்த பாஜக-வின் மக்கள் பிரதிநிதி கோஷாமஹால், ‘பசுவதைக்காக தாக்குதல் நடத்தப்படுவதை கண்டிக்கிறேன். ஆனால், என்ன செய்தாலும் இந்தத் தாக்குதல்களுக்கு முடிவு வராது. இது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட வேண்டும்’ என்று கருத்து கூறினார்.

மாடுகளைத் துன்புறுத்தினர் என்று குற்றம் சாட்டி இந்தியாவின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வரும் தாக்குதல்களுக்கு முடிவுகட்டும் நோக்கில், புதிய சட்ட நடைமுறைகளை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் சிபாரிசு செய்யப்படும் என்றும், சீக்கிரமே அது நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

.