This Article is From Dec 12, 2018

தமிழகத்துக்கு அடுத்து எப்போது மழை..? - வானிலை மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே தொடரும்

தமிழகத்துக்கு அடுத்து எப்போது மழை..? - வானிலை மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த எப்போது மழை பெய்யும் என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், ‘நேற்றைய காற்றழுத்த தாழ்வுப் பகுதி சற்றே வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக, மத்திய தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதைத் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுபெறும்.

இது தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழகத்தை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, மீனவர்கள் மத்திய தெற்கு வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு அடுத்த 2 நாட்களுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், அதனைத் தொடர்ந்து 2 நாட்களுக்கு தென் மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஆழ்கடல் மீனவர்கள், நாளை மாலைக்குள் கடலுக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே தொடரும். அதே நேரத்தில் 15 ஆம் தேதி மாலை முதல் தமிழகத்தில் மழையை எதிர்பார்க்கலாம்' என்று கூறியுள்ளார்.