This Article is From Dec 24, 2019

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 2 நாட்களுக்கு தென்தமிழகம், புதுவை மற்றும் மேற்குதொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை மையம்

தென் தமிழக கடலோரப்பகுதிகளில் அடுத்த 2 இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதனைத்தொடர்ந்து, அடுத்த 2 நாட்களுக்கு தென்தமிழகம், புதுவை மற்றும் மேற்குதொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், குமரிகடல் பகுதியில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச்செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழை காலத்தில் டிசம்பர் வரையில் குறைவாக மழைப் பதிவு பதிவான இடங்களில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 33 சதவிகிதம் அளவுக்கு மழை குறைவாக பதிவாகி இருக்கிறது. 

அடுத்ததாக பெரம்பலூரில் 28 சதவிகிதமும் வேலூரில் 26 சதவிகிதமும் குறைவான அளவு மழை பொழிந்துள்ளது. மதுரையில் 24 சதவிகிதம் குறைவாக மழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை 17 சதவிகிதம் குறைவாக இருந்தாலும், இது இயல்பை ஒட்டிய அளவே என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஒட்டுமொத்தமாக வடகிழக்குப் பருவ மழையை பொறுத்தவரை 44 சென்டிமீட்டர் மழை கிடைக்க வேண்டும், ஆனால், 45 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கிடைத்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

.