This Article is From Jul 02, 2019

மும்பையில் தொடர் கனமழையால் 16 பேர் உயிரிழப்பு! பொது விடுமுறை அறிவிப்பு!!

அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடுக்கப்படுவதாக நகராட்சி ஆணையர் நள்ளிரவு உத்தரவில் தெரிவித்தார்.

Mumbai: ஞாயிறு இரவு முதல் நகரின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தால், புறநகர் ரயில்களும் இயங்காமல் உள்ளது.

New Delhi/Mumbai:

மும்பையில் கனமழை காரணமாக பல்வேறு விபத்து சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பையில் கடந்த ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் 540 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதில் நேற்று மட்டும் ஒரே நாளில் 91.9 மில்லிமிட்டர் மழை பெய்துள்ளது.

இதனையடுத்து மும்பை மற்றும் தானே உள்ளிட்ட பல பகுதிகளில் பெய்த கனமழையால வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அத்துடன் ரயில் போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து ஆகியவை ரத்தாகியுள்ளன. மேலும் மும்பை விமான நிலையத்தின் ஓடுதள பாதையும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளதால் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மும்பை முழுவதும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை எச்சரிக்கை காரணமாக மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

54 விமானங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் மும்பை விமானம் நள்ளிரவு முதல் மூடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறுக்கிழமை முதல் தொடர்ந்து இரண்டு நாட்களாக விடாது கனமழையை சந்தித்து வருகிறது.

இந்த மழையால் பல ரயில் நிலையங்களில் மக்கள் தஞ்சம் அடைந்து அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இன்று அதிகாலை கிழக்கு மலாட் பகுதியில் குடிசைப்பகுதி ஒன்றில் சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் பலியாகியுள்ளனர். மற்றும் 13 காயம் அடைந்துள்ளனர். இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியோரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெளியேற்றி வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

அதேபோல இன்று அதிகாலை 12.30 மணியளவில் கல்யாண் பகுதியிலுள்ள பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் 3பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் புனேவில் நள்ளிரவில் கல்லூரி ஒன்றில் சுவர் இடிந்ததில் 6 பேர் பலியாகினர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மற்றும் பால்கர் பகுதியில் ஜூலை 2,4 மற்றும் 5ஆம் தேதிகளில் அதிகளவில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மகாராஷ்டிராவில் பாதிப்புகள் அதிகமாக தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

.