This Article is From Jan 29, 2019

மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதிலே காங்கிரஸ், பாஜக ஆர்வம்! - மாயாவதி

காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இருகட்சிகளுக்கும் வேறுபாடு கிடையாது.

மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதிலே காங்கிரஸ், பாஜக ஆர்வம்! - மாயாவதி
New Delhi:

மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதில் காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டுமே ஆர்வம் காட்டுகின்றன என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

சத்தீஸ்கரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ஏழைகள் பயன் பெறும் வகையில் அவர்களுக்கு குறைந்தபட்ச வருமானத்தை அரசே வழங்கும் என அறிவித்தார்.

இந்நிலையில், காங்கிரஸின் இந்த அறிவிப்பை பாஜக மட்டுமின்றி பகுஜன் சமாஜ் கட்சியும் விமர்சித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சித் தலைவர் மாயாவதி கூறியதாவது:

மக்களை  ஏமாற்றி வாக்குகளை பெறுவதில் காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டுமே ஆர்வம் காட்டுகின்றன. வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டு இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்துவதாக பிரதமர் மோடி கடந்த மக்களவை தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார்.

ஆனால் இன்று வரை இதனை நிறைவேற்றவில்லை. அது போலியான வாக்குறுதி. அதுபோலவே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைபட்ச வருமானம் அளிக்கப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

இதுவும் மற்றொரு போலி வாக்குறுதி தான். காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இருகட்சிகளுக்கும் வேறுபாடு கிடையாது என்று அவர் கூறினார்.

.