This Article is From Jan 31, 2019

வரலாறு காணாத ‘வேலை வாய்ப்பின்மை’; மோடியைச் சீண்டும் ராகுல்!

ராகுலின் சரமாரி தாக்குதலுக்குப் பின்னர் பாஜக தரப்பு, தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் கருத்து தெரிவித்துள்ளது

வரலாறு காணாத ‘வேலை வாய்ப்பின்மை’; மோடியைச் சீண்டும் ராகுல்!

நாட்டில் வேலை வாய்ப்பின்மை விகிதம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து கடந்த 2017-18-ல் 6.1 சதவிகிதமாக உள்ளது. இந்த தகவலை தேசிய கருத்துக்கணிப்பு அலுவலகம் தெரிவித்திருக்கிறது

New Delhi:

நாட்டில் வேலை வாய்ப்பின்மை விகிதம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து கடந்த 2017-18-ல் 6.1 சதவிகிதமாக உள்ளது. இந்த தகவலை தேசிய கருத்துக்கணிப்பு அலுவலகம் தெரிவித்திருக்கிறது. 

இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு கடந்த டிசம்பர் மாதமே தேசிய புள்ளியியல் ஆணையம் ஒப்புதல் அளித்திருக்கிறது. இருப்பினும், இந்தத் தகவலை வெளியிட தாமதம் ஆகியிருப்பதாக கூறி தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் உள்பட 2 உறுப்பினர்கள் தங்களது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தனர். 

தற்போது வெளியாகியிருக்கும் இந்தத் தகவலால் பெரும் சலசலப்பு உண்டாகியுள்ளது. இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மோடி, ஓராண்டுக்கு 2 கோடி வேலைகள் உருவாக்கப்படும் என்று நம்மிடம் சத்தியம் செய்தார். ஆனால், 5 ஆண்டுகள் கழித்து வெளியாகியுள்ள அறிக்கை, ஒரு தேசியப் பேரிடர் குறித்து தெரியப்படுத்தியுள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை அதிகமாக உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. 2017-18 ஆண்டில் மட்டும் 6.5 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். மோடியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது' என்று பதிவிட்டுள்ளார். 
 

ராகுலின் சரமாரி தாக்குதலுக்குப் பின்னர் பாஜக தரப்பு, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஈ.பி.எஃப்.ஓ (EPFO) அமைப்பின் தரவுகளை எடுத்துப் பார்த்தால், கடந்த 15 மாதங்களில் மட்டும் வேலை வாய்ப்பு விகிதம் எழுச்சியடைந்துள்ளது தெளிவாகத் தெரியும். யார் ஒருவருக்கு வேலையே இல்லையோ அல்லது எந்த உறுப்படியான வேலையும் பார்க்கவில்லையா அவராலேயே இப்படியெல்லாம் கருத்து சொல்ல முடியும்' என்று பதில் வாதம் வைத்துள்ளது.

ஆனால் காங்கிரஸ் தரப்பு, ‘பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி ஆகிய இரண்டும் அமல் செய்யப்பட்டதுதான் நாடு இந்த நிலைமைக்கு வந்துள்ளதற்குக் காரணம்' என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது.

.