ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் உள்ள புசேரியஸ் சம்மர் ஸ்கூலில் ராகுல் காந்தி பேச்சு
ஹைலைட்ஸ்
- எனது குடும்பத்தில் இருவரை நான் வன்முறையால் இழந்துள்ளேன்: ராகுல்
- அவரது குழந்தைகள் இடத்தில் என்னைவைத்துப் பார்த்து வருந்தினேன்: ராகுல்
- 1991இல் மனித வெடிகுண்டால் ராஜிவ் படுகொலை செய்யப்பட்டார்
Hamburg, Germany: "எனது தந்தை ராஜிவ் காந்தியைக் கொல்ல உத்தரவிட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் போர்க்களத்தில் இறந்துகிடந்ததைப் பார்த்தோ நானோ என் சகோதரி பிரியங்காவோ அதை விரும்பவில்லை" என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். "அவர் மீது செலுத்தப்பட்ட வன்முறை அவரது குழந்தைகள் உட்பட பிறரையும் பாதிக்கும்" என்று ராகுல் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியின் ஹாம்பர்கிலுள்ள புசேரியஸ் சம்மர் ஸ்கூலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு ராகுல் காந்தி பேசியதாவது:
"எனது குடும்பத்தில் இருவரை நான் வன்முறையால் இழந்துள்ளேன். எனது பாட்டி, தந்தை இருவருமே படுகொலை செய்யப்பட்டார்கள். ஆகவே நானும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் எனது அனுபவத்திலிருந்தே பேசுகிறேன். வன்முறையைக் கடந்து செல்ல மன்னிப்பது ஒன்றே வழி. அவ்வாறு மன்னிக்க, என்ன நடந்தது, ஏன் நடந்தது என்று புரிந்துகொள்வது மிகவும் அவசியம். வன்முறையைக் கையாள்வது என்பது உண்மையில் அதற்கு எதிராக அகிம்சை முறையில் எதிர்வினையாற்றுவதே. இதைப் பலர் பலவீனம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இதுதான் உண்மையான் பலம். 1991இல் என் தந்தை ராஜிவ் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். 2009இல் அவர் சாவுக்குக் காரணமான நபர் இலங்கைப் போர்க்களத்தில் இறந்துபட்டுக் கிடப்பதைப் பார்த்தேன். என் சகோதரி பிரியங்காவுக்கு போன் செய்தேன். தந்தையைக் கொன்ற நபர் இறந்ததைக் கொண்டாடவேண்டும். ஆனால் வித்தியாசமாக இருக்கிறது. ஏனோ என்னால் இதனைக் கண்டு மகிழ்ச்சியடைய முடியவில்லை என்று கூறினேன். அவளும் அதையே சொன்னாள். அவளுக்கும் இதில் மகிழ்ச்சி இல்லை. நான் மகிழ்ச்சி அடையமுடியாமல் போனதற்குக் காரணம், பிரபாகரனின் குழந்தைகளின் உருவில் நான் என்னைக் கண்டேன். அப்போது புரிந்தது. இறந்துகிடக்கும் நபரின் குழந்தைகளும் என்னைப் போலவே அவர்களது தந்தையை இழந்து அழுதுகொண்டிருப்பார்களே என்று. பிரபாகரன் ஒரு தீய, கெட்ட மனிதராக இருக்கலாம். ஆனால் அவர் மீது செலுத்தப்பட்ட வன்முறை பிறரையும் பாதிக்கிறது. என் தந்தை மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறை என்னை பாதித்தது போல. அவரது வன்முறையும் அவர் மீது வேறு ஒருவர் செலுத்திய வன்முறையின் எதிர்விளைவே. ஆகவே அகிம்சையைக் கொண்டே வன்முறையை எதிர்கொள்ள முடியும். வேறு வழி இல்லை. கண்ணுக்குக் கண் என்று பழி வாங்குவதுதான் தீர்வு என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது மீண்டும் உங்களுக்குத் திரும்பி வரும். நீங்கள் வலிமையானவர். ஒருவரை வன்முறையால் அடக்கிவிடலாம் என்று நினைக்கலாம். ஆனால் ஏதோ ஒரு வழியில் அது உங்களைத் திரும்பி வந்தடையும்."