‘சவுகிதார் திருடன்தான்’ விவகாரம்: ‘நிபந்தனையற்ற மன்னிப்பு’ கேட்ட ராகுல் காந்தி!

‘சவுகிதார் ஒரு திருடன் என்பதை நீதிமன்றமே ஒப்புக் கொண்டு விட்டது’ என்றார் ராகுல் காந்தி.

'என் கருத்துக்காக பிரதமர் மோடியிடம் வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை. சவுகிதார் திருடன்தான்’

ஹைலைட்ஸ்

  • நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைக்குமாறு ராகுல் கோரிக்கை
  • ரஃபேல் விவகாரத்தில், நீதிமன்றத்தை தவறாக மேற்கோள் காட்டினார் ராகுல்
  • ‘சவுகிதார் திருடன் என்பதை நீதிமன்றமே ஒப்புக் கொண்டுது’ என்றார் ராகுல்
New Delhi:

ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டி சென்ற ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இது குறித்து விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், ‘ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்த தேவையில்லை' என்று கூறிவிட்டது. ஆனால், ஊடகங்களில் ராணுவத் துறையின் சில ரகசிய ஆவணங்கள் கசிந்து, மீண்டும் ரஃபேல் குறித்த விசாரணைக்கு வித்திட்டது. 

ரஃபேல் விவகாரம் குறித்த வழக்கை மீண்டும் விசாரணை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் முடிவெடுத்ததை சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘சவுகிதார் ஒரு திருடன் என்பதை நீதிமன்றமே ஒப்புக் கொண்டு விட்டது' என்றார். ராகுலின் இந்த கருத்துக்கு எதிராக பாஜக தரப்பு வழக்கு தொடர்ந்தது. 

வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் தரப்பு வழக்கறிஞர், ‘எனது கட்சிக்காரர் தான் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கிறார்' என்றார். இதற்கு பாஜக தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ‘வருத்தம் தெரிவிப்பது மன்னிப்பு கேட்பதற்குச் சமமாகாது. ஒரு தவறு செய்தால், அதற்கு முழுமையான நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றும் கூறியது. 

இதைத் தொடர்ந்து இன்று ராகுல் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அஃபிடவிட்டில், ‘உச்ச நீதிமன்றத்தை தவறாக மேற்கோள் காட்டியதற்கு நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்கிறேன். அப்படி நான் கூறிய கருத்து எதேச்சையாக நடந்தது. உச்ச நீதிமன்றத்தின் மீது மாண்பும் மரியாதையும் வைத்துள்ளேன். நீதியமைப்பை அவமதிக்கும் நோக்கில் நடந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். 

அதே நேரத்தில் சென்ற வாரம் அவர் NDTV-யிடம் பேசியபோது, ‘நான் உச்ச நீதிமன்றத்தை மேற்கோள் காட்டியது தவறுதான். ஆனால், என் கருத்துக்காக பிரதமர் மோடியிடம் வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை. சவுகிதார் திருடன்தான்' என்று மீண்டும் சொன்னார். 

Listen to the latest songs, only on JioSaavn.com