''மாணவர்களிடம் பொருளாதார நிலை குறித்து பேசத் தயாரா?'' - மோடிக்கு ராகுல் காந்தி சவால்!!

இளைஞர்களின் பிரச்னைகளை பேசுவதற்கு பதிலாக பிரதமர் மோடி நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புதல் மற்றும் மக்களை பிளவு படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இளைஞர்களின் குரல் சட்டப்பூர்வமானது. அவர்களது பிரச்னைகள் ஆராயப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி பேசினார்.

நாட்டின் பொருளாதாரம் குறித்து பிரதமர் மோடியை ராகுல் விமர்சித்துள்ளார்.

New Delhi:

இந்தியாவின் பொருளாதார நிலை குறித்தும், வேலை வாய்ப்பின்மை தொடர்பாகவும் மாணவர்களை சந்தித்துப் பேச பிரதமர் மோடி தயாரா என்று ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார். 

குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை நடத்தின. இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ராகுல் காந்தி கூறியதாவது -
'பிரதமர் நரேந்திர மோடி தைரியத்துடன் பல்கலைக் கழக மாணவர்கள் முன் வந்து, எதனால் பொருளாதாரம் மிக மோசமாக உள்ளது என்பதுபற்றி பேச வேண்டும். அவருக்கு அந்த தைரியம் கிடையாது. நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கிறது என்பதுபற்றி மாணவர்களிடம் பேசுவாரா என்று சவால் விடுக்கிறேன்.

இளைஞர்களின் பிரச்னைகளை பேசுவதற்கு பதிலாக பிரதமர் மோடி நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புதல் மற்றும் மக்களை பிளவு படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இளைஞர்களின் குரல் சட்டப்பூர்வமானது. அவர்களது பிரச்னைகள் ஆராயப்பட வேண்டும்'என்று பேசினார். காங்கிரஸ் நடத்திய எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் சுமார் 20 கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். 

சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றனர். 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்து பேட்டி அளித்தார்.

அவர், 'நாடு முழுவதும் குடிமக்களின் ஆதரவுடன் இளைஞர்கள் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றால் நாடு முழுவதும் அதிருப்தியும், கோபமும் ஏற்பட்டிருப்பதை  இந்த போராட்டங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன' என்று தெரிவித்தார். 

தொடர்ந்து சோனியா பேசுகையில், 'போராட்டங்கள் குறித்து பேசுவதற்கு பதிலாக அவற்றை ஒடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. 

ஜே.என்.யூ.வில் பாஜக நடத்திய தாக்குதலை இந்த நாடே பார்த்தது. அதன் பின்னர் ஜாமியா, பனாரஸ் இந்து பல்கலைக் கழகம், அலகாபாத் பல்கலைக் கழகம் உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்தன.' என்று கூறினார். 

ஜாமியா மில்லியாவில் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது, அதனை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் அதிகரித்தது. 

கடந்த வாரம் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்திற்குள் முகமூடி அணிந்து வந்தவர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தினர். 

இன்று சோனியா தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தின்போது நாடு முழுவதும் நடந்து வரும் மாணவகள் போராட்டம், சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. 

இந்த கூட்டத்திற்கு எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை காணப்படவில்லை. திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சிவசேனா, திமுக, சமாஜ்வாதி கட்சி ஆகியவை இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. 

More News