ரஃபேல் போர் விமானத்தில் பறந்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!

இந்திய விமானப்படைக்கு வலிமை சேர்க்கும் ரஃபேல் போர் விமானத்தை பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து இந்தியா இன்று பெற்றுக் கொண்டது.

ரஃபேல் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங்.

Bordeaux:

இந்தியா ஒப்பந்தம் செய்த 36 ரஃபேல் போர் விமானங்களில் முதல் விமானம் ஒன்று இந்தியாவிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. அதில் ஏறி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் செய்தார். 

விமானத்தை பிரான்ஸ் விமான ஓட்டி ஒருவர் இயக்க, பைலட் சீட் அருகேயுள்ள இருக்கையில் ராஜ்நாத் சிங் அமர்ந்து கொண்டார். விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பாக பேட்டியளித்த அவர், உண்மையிலேயே எனக்கு இது பெருமை அளிக்கக் கூடிய தருணம் என்று குறிப்பிட்டார். 

போர் விமானிக்கான உடை, சன் கிளாஸ், பைலட்டுக்கான ஹெல்மெட் உள்ளிட்டவற்றை அணிந்து ராஜ்நாத் சிங் ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார். 

முன்னதாக ரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட போது, இந்திய முறைப்படி அதற்கு பூஜைகள் நடத்தப்பட்டு பொட்டு வைக்கப்பட்டது. விமானத்தின் சக்கரங்கள் முன்பாக எலுமிச்சைப் பழங்கள் வைக்கப்பட்டன. 

மொத்தம் ரூ. 59 ஆயிரம் கோடி அளவுக்கு ரஃபேல் விமானம் தொடர்பாக இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. முதல் பகுதியாக 4 ரஃபேல் போர் விமானங்கள் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் இந்தியா வந்து சேர்ந்து விடும். மற்றவை 2022 செப்டம்பருக்குள் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

More News