''தமிழக மக்களிடம் புதுவை கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்'' - ஸ்டாலின் வலியுறுத்தல்!!

தண்ணீர் பிரச்னை தொடர்பாக புதுவை கவர்னர் தெரிவித்துள்ள கருத்து தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரண் பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

''தமிழக மக்களிடம் புதுவை கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்'' - ஸ்டாலின் வலியுறுத்தல்!!

குஜராத், உத்தரப் பிரதேசம், பீஹார் மாநில மக்களை இப்படி கொச்சைப் படுத்திப் பேசி விட்டு, கிரண் பேடி அவர்கள் பதவியில் இருக்க முடியுமா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தண்ணீர் பிரச்னை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு புதுவை கவர்னர் கிரண் பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

புதுவை துணை நிலை ஆளுநர் மாண்புமிகு கிரண்பேடி அவர்கள், தான் சட்டப்படி ஆற்ற வேண்டிய செயல்பாடுகளின் எல்லைகளைத் தாண்டி, கட்டுப்பாடற்ற முறையில், அவருக்குத் தேவையில்லாத பிரச்சினைகளுக்குள் அத்துமீறிப் பிரவேசித்து, கருத்து கூறுகிறார். 

சென்னையில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்க முன் வந்து, “தமிழக மக்களை சுயநலமிக்கவர்கள். கோழைத்தனமானவர்கள்” என்று அநாகரிகமாக - அவர் வகிக்கும் அரசியல் சட்டப் பொறுப்புக்குக் கிஞ்சிற்றும் பொருந்தாத, அகங்காரமான ஒரு விமர்சனத்தை வைத்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாட்டின் பாதுகாப்பிற்குப் பொறுப்பு வகிக்கும் பணியில்,எத்தனையோ தமிழக வீரர்கள் தினமும் வீரமரணம் அடைகிறார்கள். இந்திய ராணுவத்தில் உள்ள தமிழக வீரர்கள் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடனும், வீர தீரம் நிறைந்த நெஞ்சுரத்துடனும் எல்லைப் பாதுகாப்புப் பணிகளில் இரவும் பகலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

அது மட்டுமின்றி, சீனப் போர், பாகிஸ்தான் போர், கார்கில் போர் என்று நம் நாடு எதிர்கொண்ட அத்தனை போர்களிலும் முன்னின்று தாராளமாக நிதியுதவி செய்து நாட்டுப்பற்றைப் போற்றியவர்கள் தமிழக மக்கள். நாட்டில் எந்த மூலையில் மக்கள் பாதிக்கப்பட்டாலும், ஓடோடிச் சென்று உதவி செய்யும் காக்கும் கரமும் கருணை உள்ளமும் படைத்தவர்கள் தமிழக மக்கள். 

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடித்து விட்டார்களே என்ற ஒரே எரிச்சலில்- அன்பும்,அறநோக்கமும், வீரமும் நிறைந்த தமிழக மக்களைப் பார்த்து “கோழைத்தனமானவர்கள், சுயநலமிக்கவர்கள்” என்று புதுவை துணை ஆளுநர் கூறியிருப்பது ஆணவத்தின் வெளிப்பாடு மட்டுமின்றி- ஆதிக்க மேலாண்மையின் அடையாளமாகவே தெரிகிறது.

குஜராத், உத்தரப் பிரதேசம், பீஹார் மாநில மக்களை இப்படி கொச்சைப் படுத்திப் பேசி விட்டு, கிரண் பேடி அவர்கள் பதவியில் ஒட்டிக் கொண்டு இருக்க முடியுமா? தமிழக மக்கள் என்ன கிள்ளுக்கீரைகளாக, கேவலமான பொருள்களாக, கவர்னரின் காமாலைக் கண்களுக்குத் தெரிகிறார்களா?

ஆகவே தமிழக மக்கள் மீதான மிக மோசமான - தரக்குறைவான - விஷமத்தனமான விமர்சனத்தை புதுவை துணை நிலை ஆளுநர் மாண்புமிகு கிரண்பேடி அவர்கள் உடனடியாகத் திரும்பப் பெற்று, தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். 
இவ்வாறு  ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.