5ம் வகுப்பில் பொதுத் தேர்வு நடத்துவது மிகப்பெரிய மனித உரிமை மீறல்: கொதிக்கும் ராமதாஸ்

அரசு சார்பில் வழங்கப் படும் சத்துணவுக்காகவும், சீருடைகளுக்காகவும் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பும் ஏழ்மைச் சமுதாயம் கிராமப்புறங்களில் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

5ம் வகுப்பில் பொதுத் தேர்வு நடத்துவது மிகப்பெரிய மனித உரிமை மீறல்: கொதிக்கும் ராமதாஸ்

5-ம் வகுப்பில் பொதுத் தேர்வு நடத்துவது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும் - ராமதாஸ்

குழந்தைகளுக்கு 5-ம் வகுப்பில் பொதுத் தேர்வு நடத்துவது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரி ஜனவரி 28-ம் தேதி போராட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

5, 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு முறையால், உளவியல் ரீதியான பாதிப்படைவார்கள் என கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பொதுத்தேர்வு நடத்தும் முடிவில் இருந்து பள்ளிக் கல்வித்துறை பின்வாங்கவில்லை. திட்டமிட்டபடி 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

இது தொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக பள்ளிக் கல்வித்துறை செய்து முடித்துவிட்டது. 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கிடப்பில் போட்டு விட்டு, பொதுத் தேர்வை நடத்துவதில் அரசு உறுதியாக இருப்பது கல்விக்குச் செய்யும் நன்மையல்ல. மாணவர்களுக்குச் செய்யும் தீமையாகும்.

கல்வித் தரத்தை உயர்த்துவது என்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால், அதற்கு முன்பாக அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் ஊரகங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் 48% பள்ளிகள் ஈராசிரியர்களைக் கொண்ட பள்ளிகளாக உள்ளன. இத்தகைய சூழலில் பயிலும் குழந்தைகளுக்கு 5-ம் வகுப்பில் பொதுத் தேர்வு நடத்துவது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.

அரசு சார்பில் வழங்கப் படும் சத்துணவுக்காகவும், சீருடைகளுக்காகவும் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பும் ஏழ்மைச் சமுதாயம் கிராமப்புறங்களில் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அவர்களுக்குக் கற்றல் என்பது முழு நேரப் பணி அல்ல. தாய் தந்தையருக்கு அவர்களது பணியில் உதவி செய்துவிட்டு, பின்னர் கிடைக்கும் நேரத்தில் பள்ளிக்கு வந்து செல்வதுதான் வழக்கம்.

இப்போதைய கல்வி முறையில் அவர்கள் பத்தாம் வகுப்பு வரையாவது படிப்பார்கள். பொதுத் தேர்வு கொண்டு வரப்பட்டால் அவர்கள் தொடக்கக்கல்வியைக் கூட முடிக்காமல் பெற்றோரின் தொழிலைச் செய்ய வேண்டிய சூழல் தான் ஏற்படும்.

கற்பித்தல் என்பது காசு கொட்டும் தொழிலாகி விட்டது. நீட் தேர்வில் தொடங்கி அனைத்து வகை நுழைவுத் தேர்வுகளும் கொண்டு வரப்படுவதன் நோக்கம் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக அல்ல. மாறாக, அத்தேர்வுகளுக்கு தனிப்பயிற்சி வகுப்புகளை நடத்துவது ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் கூடுதலாக வருமானம் ஈட்டித் தரும் தொழில் என்பதால்தான்.

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு கொண்டு வந்தால், அத்தேர்வுகளுக்காக தனிப்பயிற்சி வகுப்புகளை உருவாக்கலாம்; அதன்மூலம் வணிக வட்டத்தை விரிவுபடுத்தலாம் என்ற சிந்தனை தான் இதற்குக் காரணமாகும். இந்த வணிகச் சதி வலையில் தமிழகக் குழந்தைகளை ஆட்சியாளர்கள் சிக்க வைத்துவிடக் கூடாது.

அதன்படி 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வரும் 28-ம் தேதி பாட்டாளி மாணவர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார். 

More News