’பேனருக்கு பதில் ஹெல்மெட்’! - சூர்யா ரசிகர்களுக்கு குவியும் பாராட்டுகள்..!!

தொடர்ந்து, அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சினிமா நடிகர்களும் தங்களது ரசிகர்களுக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
’பேனருக்கு பதில் ஹெல்மெட்’! - சூர்யா ரசிகர்களுக்கு குவியும் பாராட்டுகள்..!!

‘காப்பான்’ வெளியீட்டு நாளில் டிஜிட்டல் பேனர்கள் வைக்க மாட்டோம் - நெல்லை சூர்யா ரசிகர்கள்


‘காப்பான்' திரைப்பட வெளியீட்டு நாளில், டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு பதிலாக, பொதுமக்களுக்கு 200 ஹெல்மெட்கள் இலவசமாக வழங்கப்படும் என நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர். 

சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ. ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சுபஸ்ரீ, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் மீடியனில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது கவிழ்ந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். 

அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் அவரது மகன் திருமணத்திற்காக நீதிமன்ற உத்தரவை மீறி சென்னையில் பல்வேறு இடங்களிலும் சாலையில் பேனர் மற்றும் கொடி கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனரில் ஒன்றே சுபஸ்ரீயின் உயிரை பறித்தது. மீடியனில் வைக்கப்பட்டிருந்த அந்த பேனரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் படங்கள் இடம்பெற்றிருந்தது. இந்த திருமண விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று திமுக, அதிமுக, அமமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது. 

தொடர்ந்து, அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சினிமா நடிகர்களும் தங்களது ரசிகர்களுக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னையில் நேற்று நடந்த ‘காப்பான்' பட பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசும் போது, எனது ரசிகர்கள் யாரும் கட்-அவுட், பேனர்கள் வைக்க வேண்டாம் என ஏற்கனவே பலமுறை கூறியுள்ளேன். அதனால், இனி அதனை தவிர்த்து அந்த தொகையை கல்விக்குச் செலவிடுங்கள், ரத்த தானம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடங்கள் என கேட்டுக் கொண்டார்.

இதேபோல், நடிகர் விஜய்யும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, பேனருக்கு பதில் ஹெல்மெட் வழங்கினால் அவர்களே உண்மையான காப்பான் என நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரது கோரிக்கையை ஏற்று நெல்லை மாவட்ட தலைமை சூர்யா இளைஞரணி நற்பணி இயக்கத்தினர் விரைவில் வெளியாக இருக்கும் சூர்யாவின் புதிய திரைப்படமான ‘காப்பான்' வெளியீட்டு நாளில் டிஜிட்டல் பேனர்கள் வைக்க மாட்டோம் என அறிவித்துள்ளனர்.

அதற்கு பதிலாக பொதுமக்களுக்கு 200 ஹெல்மெட்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். நடிகர் சூர்யா ரசிகர்களின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................