This Article is From Dec 14, 2019

மேற்கு வங்கத்தில் காலியாக நின்ற 5 ரயில்களை வன்முறையாளர்கள் தீயிட்டு கொளுத்தினர்!!

மேற்கு வங்கத்தில் வடக்கு மற்றும் தெற்கு பகுதியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 34-யை போராட்டக்காரர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கதேச எல்லையான மூர்ஷிதாபாத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள மற்ற சில சாலைகளும் மறிக்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில் காலியாக நின்ற 5 ரயில்களை வன்முறையாளர்கள் தீயிட்டு கொளுத்தினர்!!

உலபேரியா ரயில் நிலையத்தை மறித்துள்ள போராட்டக்காரர்கள்.

New Delhi:

குடியுரிமை திருத்த மசோதாவைக் கண்டித்து மேற்கு வங்கத்தில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடந்துள்ளன. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மற்ற வட கிழக்கு மாநிலங்களில் நிலைமை அமைதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் காலியாக நின்றுகொண்டிருந்த 5 ரயில்களை வன்முறையாளர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். முர்ஷிதாபாத்தில் லால்கோலா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து அசாம் மாநிலத்தில் துப்பாக்கிச் சூட்டின்போது 2 பேர் உயிரிழந்திருந்தனர். தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேற்கு வங்கத்தில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை தேசிய நெடுஞ்சாலை 34 -யை போராட்டக்காரர்கள் மறித்துள்ளனர். இந்த சாலை வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் வழியே செல்கிறது. இதனைத் தவிர்த்து மாவட்டத்தில் சில சாலைகளில் மறியல் நடைபெற்று வருகிறது.

போராட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'ரயில் மற்றும் சாலைகளை மறித்து மக்களுக்கு யாரும் இடையூறு அளிக்க வேண்டாம். இந்த செயல்களை மாநில அரசு பொறுத்துக் கொள்ளாது. மக்களுக்கு இடையூறு செய்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். பேருந்துகளை எரித்தவர்கள், ரயில்கள் மீது கற்களை வீசியவர்கள், பொதுச் சொத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியுள்ளார். 

குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து வருபவர்களில் மம்தாவும் முக்கியமானவராக உள்ளார். எந்த நிலைமை வந்தாலும், இந்த மசோதாவை தனது மாநிலத்தில் நிறைவேற்ற அனுமதிக்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார். 

வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு கொந்தளிப்பு காணப்பட்டாலும், மேற்கு வங்கத்தில் நிலைமை கட்டுக்குள்தான் காணப்பட்டது. தற்போதுதான் அங்கு போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ளது. 

அசாம் மாநிலம் கவுகாத்தியில்தான் வன்முறை அதிகம் காணப்பட்டது. அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மட்டுமே உத்தரவு நீடிக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. 

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, அடுத்த வாரம் பிரதமர் மோடியை கவுகாத்தியில் சந்தித்து பேசுவதாக இருந்தார். இந்த நிலையில் தொடர் போராட்டம் காரணமாக அபேவின் பயணம் ரத்து  செய்யப்பட்டிருக்கிறது. 

நாகலாந்தில் உள்ள பள்ளிகள், மார்க்கெட்டுகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. வாகனங்கள் குறைவாகவே இயக்கப்படுகிறது. இங்கு முழு அடைப்புக்கு நாகா மாணவர்கள் அமைப்பு அழைப்பு விடுத்திருக்கிறது. 

வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் அகதிளுக்கு, குடியுரிமை திருத்த மசோதா குடியுரிமை வழங்க வகை செய்கிறது. இதில் முஸ்லிம்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மசோதா சிறுபான்மையினருக்கும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிராக உள்ளதென்று கூறி நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. 

.