This Article is From Sep 04, 2019

நிலவில் தரையிறங்க தயாராகும் சந்திரயான் 2 - அதிமுக்கிய நிலையை கடந்து முன்னேற்றம்!!

இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி நிலவை நோக்கிய பாதையில் சந்திரயான் 2 சென்று கொண்டிருக்கிறது. 7-ம்தேதி அதிகாலையில் சந்திராயன் நிலவில் காலடி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலவில் தரையிறங்க தயாராகும் சந்திரயான் 2 - அதிமுக்கிய நிலையை கடந்து முன்னேற்றம்!!

ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு பின்னர் நிலவில் விண்கலத்தை இறக்கவிருக்கும் 4-வது நாடு இந்தியா.

ஹைலைட்ஸ்

  • செப்டம்பர் 7-ம்தேதி நிலாவில் தடம் பதிக்கிறது சந்திரயான் 2
  • அதி முக்கிய கட்டத்தை இன்று அதிகாலை சந்திரயான் கடந்துள்ளது
  • வரலாற்று நிகழ்வை காண மோடி இஸ்ரோ வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது
Bengaluru:

நிலவின் அனைத்து சுற்று வட்டப்பாதைகளையும் கடந்து, அங்கு தரையிறங்குவதற்கு சந்திரயான் 2 விண்கலம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இன்று அதிகாலையில் அதிமுக்கிய கட்டத்தை சந்திரயான் கடந்திருக்கிறது. திட்டமிட்டபடி சந்திரயான் 2 விண்கலம் செப்டம்பர் 7-ம்தேதி நள்ளிரவு 1.40 -ல் இருந்து 1.55-க்குள்ளாக தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே நிலவின் சுற்று வட்டப்பாதையில் சந்திரயான் 2 சுற்றிக் கொண்டிருந்த நிலையில், கடைசிக்கட்டமான 2-வது சுற்று வட்டப்பாதையை இன்று அதிகாலை முடித்துக் கொண்டது. அதிகாலை 3.42-க்கு இந்த சம்பவம் நடந்திருப்பதாக இஸ்ரோ தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறது. 
 

முன்பு நிலவின் பரப்பில் தரையிறங்குவதற்கு ஏதுவாக சந்திரயான் 2 செயற்கைகோளில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது. இந்தக்கருவிதான் நிலாவின் வட அரைக் கோளத்தில் செப்டம்பர் 7-ம்தேதி தரையிறங்கும். நிலவின் தரைப்பகுதியை தொட்டதும் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் எனப்படும் ரோவர் வெளியே வந்து, நிலாவின் மண் குறித்து ஆய்வு மேற்கொள்ளும். 

30 நாட்கள் பயணத்திற்கு பின்னர் சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக கடந்த ஆகஸ்ட் 20-ம்தேதி நிலாவின் சுற்று வட்டப்பாதைக்கு சென்றது. 

இருப்பதிலேயே சந்திரயான் 2 விண்கலம் நிலாவில் தரையிறங்குவதுதான் மிகவும் சிக்கலான பணியாகும். ஏனென்றால் மணிக்கு தற்போது சுமார் 39 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சந்திரயான் 2 சென்று கொண்டிருக்கிறது. இதேவேகத்தில் தரையிறங்கினால் வெடித்துச் சிதறுவது நிச்சயம் என்பதால் அதன் வேகத்தை குறைத்து இறக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபடுவார்கள்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ரூ. 1,000 கோடி என்ற மிகக்குறைந்த பட்ஜெட்டில் கடந்த ஜூலை 22-ம்தேதி சந்திரயான் 2 விண்ணுக்கு செலுத்தப்பட்டது.

(With inputs from PTI)

.