This Article is From Jun 13, 2019

'தேர்தல் பணி செய்யாதவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்!' - பிரியங்கா எச்சரிக்கை!!

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்ததுடன், உத்தர பிரதேசத்தில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

'தேர்தல் பணி செய்யாதவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்!' - பிரியங்கா எச்சரிக்கை!!

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி செயல்பட்டார்.

Raebareli, Uttar Pradesh:

மக்களவை தேர்தலில் கட்சிக்காக உழைக்காதவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று பிரியங்கா காந்தி எச்சரிக்கை செய்துள்ளார். 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சிறிய கூட்டணி மட்டுமே அமைத்து தேர்தலை சந்தித்தது. உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 40 தொகுதிகளுக்கு பிரியங்கா காந்தி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 

உத்தர பிரதேசத்தின் அமேதியில் ராகுல் காந்தியும், ரே பரேலியில் சோனியா காந்தியும் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் கட்சி ஒரேயொரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அதிர்ச்சி அளிக்கும் வகையில் கட்சித் தலைவர் ராகுல் காந்தியே அமேதி தொகுதியில் தோல்வி அடைந்தார். 

முன்னதாக வயநாடு மக்களவைதொகுதியிலும் போட்டியை ராகுல் அறிவித்திருந்தார். இந்த தொகுதியில் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், தேர்தலில் படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ் கட்சி மொத்தம் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. 

பாஜகவுக்கு ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை விட மொத்தம் 303 இடங்கள் கிடைத்தன. கூட்டணி என்கிற முறையில் தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் 352 இடங்களில் வென்றது. 

இந்த நிலையில், தேர்தலுக்கு பின்னர் பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியில் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-

இங்கு நான் நீண்ட உரையாற்ற வரவில்லை. நான் உண்மையை பேச வேண்டும். உத்தர பிரதேசத்தில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு சோனியா காந்தியும், தொகுதி மக்களுமே காரணம். 

நடந்து முடிந்த தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக உழைக்காதவர்களை கண்டுபிடித்து அவர்களை கட்சியை விட்டே அப்புறப்படுத்துவோம். கட்சிக்காக உழைத்தது யார், உழைக்காதது யார் என்பது குறித்த விவரம் எங்களுக்கு தெரியும்.

இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார். 

.