This Article is From Jul 17, 2020

ஆக.31ம் தேதிக்குள் 40% கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலிக்கலாம்: உயர்நீதிமன்றம்

பள்ளிகளுக்கான கட்டணத்தில் 75% கட்டணத்தை வசூலிக்கலாம் என அரசு முடிவெடுத்துள்ளது

ஆக.31ம் தேதிக்குள் 40% கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலிக்கலாம்: உயர்நீதிமன்றம்

ஆக.31ம் தேதிக்குள் 40% கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலிக்கலாம்: உயர்நீதிமன்றம்

ஹைலைட்ஸ்

  • ஆக.31ம் தேதிக்குள் 40% கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலிக்கலாம்
  • பள்ளிகளுக்கான கட்டணத்தில் 75% கட்டணத்தை வசூலிக்கலாம்
  • 2020-21 முதல் தவணை 40% ஆகஸ்ட் 31க்குள் பள்ளிகள் வசூலிக்கலாம்.

2020 - 2021 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தில் இருந்து தனியார் பள்ளிகள் 40% கட்டணத்தை ஆகஸ்ட் 31க்குள் வசூலிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது என தமிழக அரசு கடந்த ஏப்.20ம் தேதி அரசாணை பிறப்பித்தது. எனினும், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. 

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கட்டணம் வசூலிக்காமல் எப்படி ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத இதர பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும் என ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தது. 

தொடர்ந்து, தவணை முறையில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசுக்குக் கோரிக்கை மனு அனுப்பியிருந்தது. இதைத்தொடர்ந்து, உயர்நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில், தனியார் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களிலும், 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் என மூன்று தவணைகளாக வசூலிக்க அனுமதிக்க வேண்டும் எனவும், தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் அரசுக்கு மனு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. 

அந்த மனுவை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் 2021 ஏப்ரல் மாதங்கள் என மூன்று தவணைகளாகக் கட்டணம் வசூலிக்க தனியார் கல்லூரிகளை அனுமதிப்பது என முடிவு செய்துள்ளதாக அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பள்ளி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தில் இருந்து தனியார் பள்ளிகள் 40% கட்டணத்தை ஆகஸ்ட் 31க்குள் வசூலிக்கலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இன்று நடந்த வழக்கு விசாரணையின் போது, தாக்கம் எப்போது குறையும் என்று தெரியாத நிலையில் உள்ளது. அரசு உதவிப்பெறாத கல்வி நிறுவனங்கள் இந்த வழக்குகளை தொடர்ந்துள்ளது என்றார்.

கல்வி நிறுவனங்கள் செயல்பட தொடங்கினால்தான், உதவிப் பெறாதவை செயல்பட முடியும் என கல்வி நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்படுகிறது. அதே நேரத்தில் கட்டணம் செலுத்தக்கூடிய நிலைமையில் இல்லை என்ற பெற்றோர் தரப்பில் சொல்லப்படுகிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதில் அனைவரின் கவனமும் உள்ளது. பள்ளிகளுக்கான கட்டணத்தில் 75% கட்டணத்தை வசூலிக்கலாம் என அரசு முடிவெடுத்துள்ளது என்றார்.

தொடர்ந்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மேலும் இரண்டாம் தவணையான 25% பள்ளிகள் திறக்கும்போது வசூலிக்கலாம் என அரசு சொல்லியுள்ள நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கும் என தெரியாத நிலை இருக்கிறது. அதனால் 2020-21 முதல் தவணை 40% ஆகஸ்ட் 31க்குள் பள்ளிகள் வசூலிக்கலாம். இந்த உத்தரவு அரசு உதவிபெறாத அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றார்.

தொடர்ந்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பதாக அவர் கூறினார். 

.