This Article is From Nov 07, 2018

இந்திய - சீன எல்லையிலுள்ள ராணுவ வீரர்களுடன் மோடி தீபாவளி கொண்டாட்டம்!

மோடி, பிரதமராக பதவியேற்ற பிறகு 2014 ஆம் ஆண்டு தீபாவளியை சியாச்சினில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்

இன்று காலை நாட்டு மக்களுக்கு ட்விட்டர் மூலம் தீபாவளி வாழ்த்து கூறினார் மோடி

ஹைலைட்ஸ்

  • கேதார்நாத் கோயில் இன்று தரிசனம் செய்தார் மோடி
  • ட்விட்டர் மூலம் மக்களுக்கும் அவர் வாழ்த்து கூறினார்
  • தீபாவளியன்று சந்தோஷம் பெருகட்டும், மோடி
New Delhi:

இந்திய - சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுடன் இன்று தீபாவளியை கொண்டாடி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. முன்னதாக அவர் உத்தரகாண்டின் கேதார்நாத் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். 

பிரதமர் மோடியின் பயணம் குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘125 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தையும், கனவுகளையும் பாதுகாப்பது உங்களைப் போன்று எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்கள் தான். 

தீபாவளி என்பது தீபங்களின் திருவிழா. நம் வாழ்க்கையில் இந்தத் திருநாள் நல் வெளிச்சத்தைப் பாய்ச்சி, அச்சத்தைப் போக்குகின்றது. அதேபோல, ராணுவ வீரர்கள் அவர்களின் கடமையாலும் ஒழுக்கத்தாலும், பாதுகாப்பு உணர்வையும் அச்சமின்மையையும் மக்களுக்கு கடத்துகின்றனர்' என்று ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இன்று காலை நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய மோடி, ‘தீபாவளி வாழ்த்துகள். இந்த பண்டிகை உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சையையும், ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும். உங்கள் வாழ்க்கை எப்போதும் ஒளி நிரம்பியதாக இருக்கட்டும்' என்று ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார். 

மோடி, பிரதமராக பதவியேற்ற பிறகு 2014 ஆம் ஆண்டு தீபாவளியை சியாச்சினில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். அதைத் தொடர்ந்து 2015-ல், பஞ்சாப் எல்லைக்கு சென்று தீபாவளி கொண்டாடினார். அதற்கு அடுத்த ஆண்டு, இமாச்சல பிரதேசத்துக்குச் சென்று இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து சென்ற ஆண்டு, ஜம்மூ - காஷ்மீரின் குரெஸிற்கு சென்று ராணுவ வீரர்களுடன் தீபாவளிய கொண்டாடி மகிழ்ந்தார். 
 

.