
P Chidambaram - "திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா, சட்ட சாசனத்துக்கு எதிரானது"
The Citizenship (Amendment) Bill - காங்கிரஸின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான ப.சிதம்பரம் (P Chidambaram), ‘சட்டவிரோதமான' திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா நிறைவேற்றத்துக்குக் கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி 2 மாதங்கள் சிறையில் இருந்த ப.சிதம்பரம், சில நாட்களுக்கு முன்னர்தான் வெளியே வந்தார். அவர் பிணையில் விடுதலை அடைந்ததில் இருந்து தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கறார் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
மசோதா குறித்து சிதம்பரம், தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கொடுப்பதால் நாம் அனுபவிக்கும் துன்பம் இதுதான். மக்களுக்கும் நாட்டுக்கும் எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது இந்த அரசு.
திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா, சட்ட சாசனத்துக்கு எதிரானது. அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒரு மசோதாவிற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் கொடுத்துள்ளது. இனி உச்ச நீதிமன்றத்துக்கு களம் மாறும்,” என்று அதிரடியாக பதிவிட்டுள்ளார்.
12 மணி நேர விவாதங்களுக்குப் பிறகு, திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. 311 லோக்சபா உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க, 80 பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிரானது இந்த மசோதா என்னும் வாதத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை மசோதாவை அறிமுகப்படுத்திப் பேசும்போது, “0.001 சதவிகிதம் கூட இது இந்திய சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல,” என்று முழங்கினார்.
That is the price we pay for giving a party a brute majority that it uses to trample over the wishes of the States and the People.
— P. Chidambaram (@PChidambaram_IN) December 10, 2019
திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவில், பாகிஸ்தான் வங்கதேசம் மற்றும் அப்கானிஸ்தானில் இருக்கும் இந்து, சீக்கியர்கள், புத்தர்கள், ஜெயினர்கள், பார்சிக்கள் மற்றும் கிறித்துவர்கள், டிசம்பர் 31, 2014 ஆம் ஆண்டு வரை மத ஒடுக்குமுறைக்கு ஆளாகி இந்தியாவுக்கு வந்திருந்தால் அவர்கள் அகதிகளாக நடத்தப்படாமல், குடியுரிமை வழங்கப்படும் என்கிறது.
இந்த மசோதா மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், அப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுக்கப்படாது என்பதை முன்வைத்து எதிர்க்கட்சிகள் குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
முன்னதாக இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விஞ்ஞானிகள் மற்றும் அறிவுஜீவிகள் உட்பட 1000 பேர் அறிக்கை வெளியிட்டனர். அவர்கள், மத அடிப்படையில் இந்தியாவில் குடியுரிமை கொடுக்கப்படும் என்று சொல்வது மிகுந்த வருத்தத்திற்குரியது என்றனர்.
சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர், பாஜக பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி லோக்சபாவில் மசோதாக்களை உடனுக்குடன் ஒப்புதல் பெற்று வருகிறது என்று குற்றம் சாட்டினார். திரிணாமூல் காங்கிரஸின் டெரிக் ஓபிரியன், “பீட்சா டெலிவரி செய்வது போல மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறப்படுகிறது,” என்று அரசை விமர்சித்தார்.
With input from PTI