This Article is From Nov 18, 2019

டெல்லி காற்றுமாசு பிரச்னை : மின்சார காரில் நாடாளுமன்றத்திற்கு வந்த மத்திய அமைச்சர்!!

மின்சார கார்களை வாங்க அரசு மானியம் அளிப்பதாகவும், இதனைப் பயன்படுத்தி மக்கள் மின்சார வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

டெல்லி காற்றுமாசு பிரச்னை : மின்சார காரில் நாடாளுமன்றத்திற்கு வந்த மத்திய அமைச்சர்!!

உலகிலேயே மிகவும் காற்று மாசடைந்த நகரமாக டெல்லி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

New Delhi:

டெல்லி காற்று மாசு காரணமாக, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மின்சார காரில் இன்று நாடாளுமன்றத்திற்கு வந்தார். மக்களும் சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத மின்சார வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

டெல்லியில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்டிருக்கும் காற்று மாசு காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அனைத்து தரப்பு மக்களையும் இந்த காற்று மாசு விட்டு வைக்கவில்லை. 

2 வாரங்களுக்கும்  மேலாக டெல்லி காற்று மாசு பிரச்னை உலகளவில் பேசப்பட்டது. இதன் விளைவாக காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் டெல்லி முதலிடம் வகிப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. 

கூட்டத்திற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மின்சார வாகனத்தில் வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது-

நான் வந்த மின்சார காரில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 450 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் செல்ல முடியும். நான் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைச்சர். டெல்லி காற்று மாசை கட்டுப்படுத்த தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்ததை செய்துள்ளேன். 

மின்சார கார்கள் வாங்குவதற்கு அரசு மானியம் அளிக்கிறது. இதனைப் பயன்படுத்தி மக்கள் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்த வேண்டும். காற்று மாசை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மக்கள் சைக்கிள், மின்சார கார்களை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்காக மக்கள் தங்களுடைய வாழ்க்கை முறையை சற்று மாற்றிக் கொள்ள வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார். 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் டெல்லி காற்று மாசுபாட்டு பிரச்னையை முதலில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக எம்.பி. மன்சுக் மண்டாவியா மற்றும் மனோஜ் திவாரி ஆகியோர் சைக்கிளில் நாடாளுமன்றத்திற்கு வந்தனர். 

.