This Article is From Jan 09, 2020

1000 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு ​​தொகுப்பு விநியோகம் தொடக்கம்!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று (9ம் தேதி) முதல் வருகிற 13ம் தேதி வரை பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1000 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு ​​தொகுப்பு விநியோகம் தொடக்கம்!

குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவு

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று காலை 8.30 மணி முதல் ரூ.1000 ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு, விநியோகம் தொடங்கியது. 

பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்க பணம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் போன்றவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு 1,000 ரூபாய் ரொக்கத்துடன் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று (9ம் தேதி) முதல் வருகிற 13ம் தேதி வரை பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், ஜனவரி 9ம் தேதி முதல் தொடங்கி 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13ம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க தொகை வழங்க வேண்டும். 

ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் குறைந்தபட்சம் தினசரி 250 முதல் 300 பேருக்கு தெரு வாரியாக பிரித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தேதிகளில் எந்த தெருவில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்பது பற்றி ரேஷன் கடையில் உள்ள நோட்டீஸ் பலகையில் எழுதி ஒட்டப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் அதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஒருவர்கூட விடுபடாமல் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றதை உறுதி செய்யும் வகையில், அந்தந்த நியாய விலைக்கடைகளில் உள்ள ஒப்புதல் படிவத்தில் பொதுமக்களின் கையெழுத்து பெறப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

.