This Article is From Apr 24, 2019

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: வாட்ஸ் ஆப் நிறுவனம் ஒத்துழைக்கவில்லை என புகார்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணைக்கு வாட்ஸ் அப் நிறுவனம் சரியாக ஒத்துழைக்கவில்லை என காவல்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: வாட்ஸ் ஆப் நிறுவனம் ஒத்துழைக்கவில்லை என புகார்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் முகநூல் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. இந்த சம்பவங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக கோவையில் தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கும்பலால் 60க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறது. அதேபோல், வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அத்துடன் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், இன்று அந்த வழக்கு விசாரணையின் போது காவல்துறையினர் வாட்ஸ் ஆப் நிறுவனம் இந்த வழக்கில் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனத் தெரிவித்தது. இதனையடுத்து நீதிபதிகள் மத்திய அரசு விசாரணைக்கு ஒத்துழைக்காத ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை ஏன் தடைசெய்யக் கூடாது என கேள்வி எழுப்பினர்.

இதற்கு மத்திய அரசு தரப்பில், இன்னும் சில சமூக வலைத்தளங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அமைக்கவேண்டிய குறைகளை தீர்க்கும் பொதுதகவல் அதிகாரிகளை நியமிக்கவில்லை எனத் தெரிவித்தது.

இதனையடுத்து நீதிபதிகள் அனைத்து சமூகவலைத்தளங்களுக்கும் ஏன் சட்டங்களை மதிக்காமல் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பது குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.
 

.