This Article is From Mar 19, 2019

பொள்ளாச்சி வழக்கு: நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்!

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கின் பேரில், சைபர் கிரைம் போலீசார் நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பொள்ளாச்சி வழக்கு: நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்!

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தயது தொடர்பான வழக்கு.

Chennai:

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபல், கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளுடன் முகநூல் வழியாக நண்பர்களாக பழகி அவர்களை வெளியே அழைத்து சென்று ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதனை வீடியோவாகவும் எடுத்து அதனை காட்டி அந்த மாணவிகளை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளது ஒரு கும்பல். இதனை கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக அந்த கும்பல் செய்து வருவதாகவும், இவர்களால், சுமார் 200க்கும் மேலான பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அந்த கும்பலின் கைபேசியில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் பாதிக்கப்பட்ட எந்த பெண்களும் புகார் தெரிவிக்காததால் தொடர்ந்த அந்த கும்பலின் அட்டூழியம் நீடித்து வந்துள்ளது.

இதனிடையே, கடந்த 25ஆம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் துணிச்சலாக கொடுத்த புகாரின் பேரில் இந்த விவகாரம் தற்போது வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தும் சில வீடியோக்களும் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. நெஞ்சை உலுக்கும் படுபயங்கரமான சம்பவத்தின் அந்த வீடியோ காட்சிகள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், சமூகவலைதளங்களில் வெளியான வீடியோக்களை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடந்த 15ஆம் தேதி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால் எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் பொதுவெளியில், அவரது பத்திரிகை மற்றும் இணையதளம் மூலமாக அவதூறான கருத்துக்களை பரப்பி வருவதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் புகார் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், கடந்த மார்ச் 15ம் தேதி ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பினர்.

இதில், நக்கீரன் கோபால் சார்பாக அவரது வழக்கறிஞர் ஆஜரானர். எனினும், இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக்கோரி நக்கீரன் கோபால் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் ஆதாரங்களை எந்த ஒரு ஊடகங்களும் வெளியிடக்கூடாது என்ற அச்சுறுத்தல் அளிப்பதே வழக்கு தொடர்ந்தவரின் நோக்கமாக உள்ளது என்றும் இதன் மூலம் அவர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்னிலையில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில் நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

.