This Article is From Mar 15, 2019

பொள்ளாச்சி கொடூரம்: வலுக்கும் மாணவர்கள் போராட்டம்; கல்லூரிகள் மூடல்!

இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி கொடூரம்: வலுக்கும் மாணவர்கள் போராட்டம்; கல்லூரிகள் மூடல்!

இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரண்டு நாட்களாக திருச்சி, கோவை, திருவண்ணாமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Pollachi/Chennai:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் முகநூல் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. இந்த சம்பவங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக கோவையில் தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கும்பலால் 60க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டு, பொள்ளாச்சியில் இருக்கும் கல்லூரி மாணவர்கள் பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாணவர்கள் போராட்டத்தால் பிரச்னை வந்துவிடக் கூடாது என்று கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருக்கும் உள்ளூர் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில், கடந்த செவ்வாயன்று இந்த பாலியல் கொடூர வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது தொடர்பான அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

இதனிடையே, இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரண்டு நாட்களாக திருச்சி, கோவை, திருவண்ணாமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடுமலைப்பேட்டை அருகில் உள்ள ஸ்ரீ ஜிவிஜி விசாலாக்‌ஷி பெண்கள் கல்லூரி மாணவிகள், நேற்று சாலைக்கு வந்து, ‘எங்களுக்கு நீதி வேண்டும்' என்று கோஷம் எழுப்பிப் போராட்டம் செய்தனர். அதில் ஒரு மாணவி, ‘குற்றவாளிகள் துன்புறுத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்' என்று கொதித்தார். 

அதேபோல கோயம்பத்தூரில் வழக்கறிஞர்கள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்கள் சென்னை உயர் நீதிமன்ற பெண் நீதிபதி தலைமையில் வழக்கு குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 

.