This Article is From Mar 15, 2019

பொள்ளாச்சி விவகாரம்: பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்டதற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்டதற்கு இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை பிறப்பித்துள்ளது.

பொள்ளாச்சி விவகாரம்: பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்டதற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளுடன் முகநூல் வழியாக நண்பர்களாக பழகி அவர்களை வெளியே அழைத்து சென்று ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதனை வீடியோவாகவும் எடுத்து அதனை காட்டி அந்த மாணவிகளை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளது ஒரு கும்பல். 

இதனை கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக அந்த கும்பல் செய்து வருவதாகவும், இவர்களால், சுமார் 200க்கும் மேலான பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அந்த கும்பலின் கைபேசியில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் பாதிக்கப்பட்ட எந்த பெண்களும் புகார் தெரிவிக்காததால் தொடர்ந்த அந்த கும்பலின் அட்டூழியம் நீடித்து வந்துள்ளது.

இதனிடையே, கடந்த 25ஆம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் துணிச்சலாக கொடுத்த புகாரின் பேரில் இந்த விவகாரம் தற்போது வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தது.

இதைத்தொடர்ந்து, நேற்று இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணையிலிருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் இடம்பெற்றிருந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் பெயர், அவர் படிக்கும் கல்லூரி, அவரது சகோதரர் பெயர் என அனைத்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதனையடுத்து, அரசாணையில் விதிமுறைகளை மீறி பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து திருச்சியைச் சேர்ந்த முகில் என்பவர் இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் இருந்து நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இதேபோல், வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை திரும்பப் பெற்று பாதிக்கப்பட்டவரின் அடையாளமின்றி புதிதாக அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். 

இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த உத்தரவின் நகல் தற்போது வெளியாகியுள்ளது. அதில், அடையாளத்தை வெளியிட்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், வழக்கு விசாரணையின் தொடக்கத்திலேயே 4 பேர் மட்டுமே குற்றவாளிகள், 4 வீடியோக்கள் மட்டுமே வெளியாகியுள்ளன என தெரிவித்த காவல் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

.