பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு: சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு!

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே சிபிஐக்கு பரிந்துரைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு: சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் முகநூல் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. இந்த சம்பவங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக கோவையில் தொடர்ந்து நடந்து வந்துள்ளது. இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட எந்த பெண்ணும் புகார் தெரிவிக்க முன்வராததால் இவர்களின் அட்டகாசம் நீடித்து வந்துள்ளது.

இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மாணவிகளை பாலியல் துன்புறுத்தும் சில வீடியோக்களும் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. நெஞ்சை உலுக்கும் படுபயங்கரமான சம்பவத்தின் அந்த வீடியோ காட்சிகள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று காலை இவர்கள் 4 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டார். எனினும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுத்த வந்தன.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே சிபிஐக்கு பரிந்துரை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மேலும் படிக்கபொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்! - டிஜிபி உத்தரவு