This Article is From Aug 21, 2019

ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைகளுக்கு அரசியல் காழ்ப்புணர்வே காரணம்: மு.க.ஸ்டாலின்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்ஜாமீன் கிடைக்காததால் ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து அமலாக்கத்துறை நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைகளுக்கு அரசியல் காழ்ப்புணர்வே காரணம்: மு.க.ஸ்டாலின்

ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைகளுக்கு அரசியல் காழ்ப்புணர்வே காரணம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில், சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து கபில் சிபில் தலைமையிலான ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர் குழு, உச்சநீதிமன்றத்தல் இன்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. 

இதனிடையே, டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டுக்குள் நேற்று மாலை சிபிஐ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென நுழைந்தனர். அப்போது, அவர் வீட்டில் இல்லாததால் திரும்பினர். இதைத்தொடர்ந்து, மீண்டும் நேற்று இரவு நான்கு சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு சென்றதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. ப.சிதம்பரம் வீட்டில் இல்லாத நிலையில் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். 

அந்த நோட்டீசில் ப.சிதம்பரம் இரண்டு மணி நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிதம்பரத்திற்கு அந்த நோட்டீஸின் நகலை மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பி வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், இன்று காலை முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. அயோத்தி வழக்கை விசாரித்து வருவதால் உடனடியாக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. 

இதனிடையே, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்ஜாமீன் கிடைக்காததால் ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து அமலாக்கத்துறை நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. 2-வது நாளாக ப.சிதம்பரம் இருக்கும் இடம் தெரியாததால் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து திமுக நடத்தும் போராட்டத்தில் 14 எதிர்க்கட்சிகள் பங்கேற்கவிருப்பதாகவும், டி.ஆர்.பாலு தலைமையில் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார். 

அப்போது ப.சிதம்பரம் குறித்த கேள்விக்கு பதலளித்த அவர், ப.சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அரசியல் காழ்புணர்வோடு இத்தகைய செயல் நடைபெறுவதாக நான் அறிகிறேன். மேலும் ப.சிதம்பரம் சட்ட வல்லுநர் என்பதால் இந்த வழக்கை அவர் சட்டரீதியாகவே எதிர்கொள்வார் எனத் தெரிவித்துள்ளார்.


 

.