குற்றப்பின்னணி கொண்டவர்களை வேட்பாளர்களாக களமிறக்கியது ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி

அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விவரங்களை அவர்களது வலைத்தளங்களில் பதிவேற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தில் 72 மணி நேரத்தில் தகவல்களை சமர்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

New Delhi:

கடந்த நான்கு நாடாளுமன்ற தேர்தலில், குற்றப்பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை அரசியலில் அதிகரித்து வருவதை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விவரங்களையும், அவர்களை தேர்வு செய்ததற்கான காரணங்களையும் வலைத்தளங்களில் பதிவேற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அரசியல் கட்சிகள் தங்களின் இணையதளம், சமூக வலைத்தளங்கள், நாளேடுகள் உள்ளிட்டவற்றில் 48 மணி நேரத்தில் வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை வெளியிட வேண்டும் என்றும், குற்றப்பின்னணி கொண்டவர்களை தேர்வு செய்ததற்கான காரணங்களையும் தங்களது இணையதளத்தில் குறிப்பிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், இதே தகவல்களை 72 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திலும் சமர்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணம் தகுதியின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும்,  வெற்றிபெறுவது மட்டுமே ஒரு வேட்பாளரின் திறன் ஆகிவிடாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசியல் கட்சிகள் இந்த விவரங்களை வழங்கத் தவறினாலோ, அல்லது தேர்தல் ஆணையத்தால் இந்த உத்தரவை செயல்படுத்த முடியாவிட்டாலோ, அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தலில் போட்டியிடுவதற்கு முன், தங்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் தெரிவிக்கவேண்டும் என்றும், செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக, குற்ற வழக்குகளை விளம்பரம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த 2018ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. 

இதனை முறையாகக் கடைப்பிடிக்கவில்லை என கூறி, தலைமை தேர்தல் ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தலைவரும் வழக்குரைஞருமான அஷ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கு விசாரணையின் போது தேர்தல் ஆணையம், வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்களை வெளியிடுவதற்கான நீதிமன்ற உத்தரவில் எந்த பாதிப்பும் இல்லை என்றும், குற்றவியல் வழக்குகள் உள்ளவர்களுக்கு தேர்தலில் இடம் கொடுக்க வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் வாதங்களின் போது கூறியது.

அண்மையில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் கடுமையான குற்ற வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.

Listen to the latest songs, only on JioSaavn.com