This Article is From Aug 14, 2018

பிரதமரின் ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: சுதந்திர தினத்தன்று அறிமுகம்

10கோடிக்கும் மேற்பட்ட ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 இலட்சம் ரூபாய்க்கான காப்பீடு வழங்கும் வகையில் இத்திட்டம் வடிமைக்கப்பட்டுள்ளது

பிரதமரின் ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: சுதந்திர தினத்தன்று அறிமுகம்
New Delhi:

ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தை (AB-NHPS) சுதந்திர தினத்தன்று சோதனை முயற்சியாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க இருக்கிறார். இது முதலில் சில மாநிலங்களில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் செப்டம்பர் மாத இறுதியில் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

10கோடிக்கும் மேற்பட்ட ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 இலட்சம் ரூபாய்க்கான காப்பீடு வழங்கும் வகையில் இத்திட்டம் வடிமைக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளியோரையும் நகரங்களிலுள்ள (அடையாளம் காணப்பட்ட துறைகளில்) ஏழைப்பணியாளர்களின் குடும்பங்களையும் மனதில் வைத்து இத்திட்டம் தொடங்கப்படுகிறது. இதன்மூலம் கிராமப்பகுதிகளில் 8.03கோடி குடும்பங்களும் 2.33 கோடி நகர்ப்பகுதி குடும்பங்களும் மொத்தத்தில் ஐம்பது கோடி மக்கள் பயன்பெறுவர்.

இதுகுறித்து தகவல் தெரிவித்த ஓர் அரசு அலுவலர், “சுதந்திர நாள் உரையில் இதுகுறித்த அறிவிப்பை பிரதமர் வெளியிடுவார். மேலும் தொடக்கத்தில் சோதனை முறையாக ஒரு சில மாநிலங்களில் இது உடனடியாகத் தொடங்கப்படலாம். கேரளா, பஞ்சாப், மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்கள் இத்திட்டத்தில் சேர ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ஒதிசா இத்திட்டத்தை நிராகரித்துள்ளது. இதுவரை 22 மாநிலங்கள் நம்பிக்கை அடிப்படையில் இத்திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன. இத்திட்டத்துக்காக மத்திய அரசு 10000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. உலகின் மிகப் பெரிய அளவிலான அரசாங்க மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இதுவேயாகும்” என்று கூறினார்.

இத்திட்டத்தில் 1354 பேக்கேஜுகளை அரசு சேர்த்துள்ளது. இதன்கீழ் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை, முழங்கால் மாற்று சிகிச்சை, இரத்தக்குழாய் சிகிச்சை ஆகியவை மத்திய அரசு மருத்துவத் திட்டத்தின் செலவில் 15-20% வரை குறைவாக ஆகும்.

இதன் பயனாளிகளுக்கு QR கோடுடன் கூடிய கடிதம் அளிக்கப்படும். உதவி மையங்கள் மருத்துவமனைகளில் அமைக்கப்படும். நோயாளிகளுக்கு உதவ பிரதிநிதிகளும் நியமிக்கப்படுவர்.

.