This Article is From May 25, 2019

தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற தலைவராக மோடி தேர்வு!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 543 தொகுதிகளில் போட்டியிட்டு 303 இடங்களை கைப்பற்றியது. மொத்தமாக தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை வென்றுள்ளது.

பாஜக ஆட்சி மன்ற குழுவின் தலைவராகவும் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

New Delhi:

தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து அடுத்ததாக ஆட்சியமைப்பதற்கு உரிமை கோருவதற்கு முன்பாக இந்த தேர்வு நடந்துள்ளது. 

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது பேசிய மோடி, 'தேசிய ஜனநாயக கூட்டணியின் வளர்ச்சி திட்டங்களுக்கு மக்கள் அளித்த பரிசுதான் மக்களைவ தேர்தல் வெற்றி. 2019 மக்களவை தேர்தல் பல தடைகளை உடைத்து மக்கள் மனதை சென்றடைய எனக்கு உதவியது.' என்றார். 

முன்னதாக மோடியின் பெயரை தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பாஜக தலைவர் அமித் ஷா அறிவித்தார். அப்போது நாடாளுமன்றத்தில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் மக்களவை உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் 'மோடி, மோடி' என்று கூறி மேசையை தட்டினர். 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனியாக 303 இடங்களில் வெற்றி பெற்றது. ஒட்டு மொத்தமாக பாஜக கூட்டணிக்கு 353 இடங்கள் கிடைத்தன. 

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அகாலி தள தலைவர் பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பாஜகவின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்று மோடியை வாழ்த்தினர். 

புதிய அரசை அமைப்பதற்கு முன்னோட்டமாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை, மோடி தலைமையிலான அமைச்சர்கள் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்கள். இதனை ஏற்றுக்கொண்ட ராம்நாத் கோவிந்த், அடுத்த அரசு அமையும் வரையில் மத்திய அரசுக்கு பொறுப்பாளராக இருக்கும்படி மோடியை கேட்டுக்கொண்டார். 

.